கடவத்தை – மீரிகம அதிவேக நெடுஞ்சாலை கட்டுமானப்பணிகள் இன்று ஆரம்பம்

கடவத்தை – மீரிகம அதிவேக நெடுஞ்சாலை கட்டுமானப்பணிகள் இன்று ஆரம்பம்

மத்திய அதிவேக நெடுஞ்சாலை திட்டத்தின் கடவத்தை முதல் மீரிகம வரையிலான பகுதியின் நிர்மாணப் பணிகள் இன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் மீண்டும் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

2016 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம் தற்போது திறக்கப்பட்டிருந்தாலும், முதல் கட்டத்தின் நிர்மாணம் பல்வேறு காரணங்களால் தாமதமானது.

சீன எக்ஸிம் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட 989 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் ஒப்பந்தத்தின் கீழ் 2016 ஆம் ஆண்டு இந்த நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

168.7 கிலோமீற்றர் நீளம் கொண்ட மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப்பணிகள் 4 கட்டங்களாக முன்னெடுக்கப்படவுள்ளன.

முதல் கட்டம் கடவத்தை முதல் மீரிகம வரை 37 கிலோமீற்றர் நீளமும், இரண்டாவது கட்டம் மீரிகம முதல் குருணாகல் வரை 39.7 கிலோமீற்றர் நீளமும், மீரிகம முதல் அம்பேபுஸ்ஸ வரை 9.1 கிலோமீற்றர் நீளமும் கொண்டுள்ளது.

மூன்றாவது கட்டம் பொத்துஹெர முதல் கலகெதர வரை 32.5 கிலோமீற்றர் நீளமும், நான்காவது கட்டம் குருணாகலிலிருந்து தம்புள்ள வரை 60.3 கிலோமீற்றர் நீளமும் கொண்டுள்ளது.

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாவது கட்டமான மீரிகம முதல் குருணாகல் வரையிலான பகுதி 2022 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் திகதி பொதுமக்களின் பாவனைக்காக திறக்கப்பட்டது.

இருப்பினும், அடுத்தடுத்த அரசியல் ஸ்திரமின்மை, பொருளாதார நெருக்கடி மற்றும் தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக, சீன எக்ஸிம் வங்கியால் திட்டத்துக்கான நிதி நிறுத்தப்பட்டதால், முதல் கட்டமான கடவத்தை முதல் மீரிகம வரையிலான பகுதியின் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன.

சுமார் 20 சதவீதம் நிறைவடைந்துள்ள கடவத்தை-மிரிகம பகுதியின் நிர்மாணப்பணிகளை மீண்டும் தொடங்க சீன எக்ஸிம் வங்கி 500 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சமமான யுவான் கடனை அங்கீகரித்துள்ளது.

இந்த நிலையில், கடவத்தை முதல் மீரிகம வரையிலான பகுதி 2028 ஆம் ஆண்டில் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பாவனைக்காக திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )