
பிலிப்பைன்ஸ் ‘கல்மேகி’ புயலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 244ஆக அதிகரிப்பு
பிலிப்பைன்ஸைத் தாக்கிய “கல்மேகி” புயலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 244ஆக உயர்ந்துள்ளது.109 பேர் காணாமல் போனதாக குடியரசுக் கட்சியின் சிவில் பாதுகாப்பு அலுவலகத்தை மேற்கோள் காட்டி GMA செய்தி தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
புயல் ஏற்படுத்திச் சென்ற பாதிப்பினை தொடர்ந்து
தற்போது மீட்பு பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
நிவாரணப்பணிகளில் சுமார் 200,000 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த சில நாட்களாக பிலிப்பின்ஸில் மழையுடன் கூடிய சூறாவளி காற்று காரணமாக சுமார் 1.6 மில்லியன் வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
சுமார் 3000 வீடுகளின் கூரைகள் புயலில் தூக்கி வீசப்பட்டதாகவும் சுமார் 57 கட்டடங்கள் இடிந்து விழுந்ததோடு ஆற்றங்கரையோர வீடுகளும் வாகனங்களும் பெரிய அளவிலான கன்டெய்னர்களும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது .
இந்த சூறாவளி புயல் பிலிபைன்ஸ் நாட்டின் சிபு ,நீக்ரோஸ் ஆகிய தீவுகளை தாக்கியதில் 244ற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்த அதே வேளை வியட்நாம் நாட்டின் Dak Lak, Quang Ngai, and Gia Lai மாகாணங்களை தாக்கியதில் ஐந்து பேர் வரை உயிரிழந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயலின் காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட 537,000 க்கும் மேற்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்ற அந்நாட்டின் அனர்த்த முகாமைத்துவ நிலையம் நடவடிக்கை எடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது .
பிலிப்பைன்ஸ் நாட்டின் ஜனாதிபதி பெர்டினண்ட் மார்கோஸ் இந்த புயல் தாக்கத்தை தேசிய பேரிடராக அறிவித்தமை குறிப்பிடத்தக்கது .

