
நான்கு அமைச்சுகளின் 2025 வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகள் தொடர்பான முன்னேற்றம் குறித்து உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடல்
நான்கு அமைச்சுகளின் 2025 ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகள் தொடர்பான நிதிசார் மற்றும் பௌதீக முன்னேற்றம் குறித்து உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது.
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் அவர்களின் தலைமையில் அந்தக் குழு அண்மையில் (11) பாராளுமன்றத்தில் கூடியபோதே இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
அதற்கமைய, வலுசக்தி அமைச்சு, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு, வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சு மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு ஆகிய நான்கு அமைச்சுகளின் 2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளின் நிதிசார் மற்றும் பௌதீக முன்னேற்றம் ஆராயப்பட்டது. இந்த அமைச்சுக்களின் செயலாளர்களும் சம்பந்தப்பட்ட நிறுவனத் தலைவர்களும் இந்தக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
களனிவௌி புகையிரதப் பாதைக்காக கடந்த ஆண்டு 250 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்ட போதிலும், அதன் முன்னேற்றம் குறைவாக உள்ளமை குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
கடந்த மார்ச் மாதம் வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் நிதி ஒதுக்கப்பட்டிருந்த போதிலும், இதுவரை காணப்பட்ட முன்னேற்றம் திருப்தியளிக்கவில்லை என்றும், இது புகையிரத திணைக்களத்தின் வினைத்திறனின்மையைப் பிரதிபலிப்பதாகவும் குழு சுட்டிக்காட்டியது.
இந்த வருடமும் வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகள் மூலம் களனிவௌி புகையிரதப் பாதைக்காக 840 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்ட போதிலும், உரிய திட்டத்துடன் வினைத்திறனாகச் செயற்படாவிட்டால் இலக்கு வைக்கப்பட்ட முன்னேற்றத்தை எதிர்பார்க்க முடியாது என்றும், இதனால் மக்களின் எதிர்பார்ப்புகள் சரியான நேரத்தில் நிறைவேற்றப்படாமல் போகும் என்றும் குழு சுட்டிக்காட்டியது.
தம்புத்தேகம புகையிரத நிலைய அபிவிருத்திக்காக 2025 வரவுசெலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி பயன்படுத்தப்பட்டதன் முன்னேற்றம் குறித்தும் இங்கு வினவப்பட்டதுடன், அதிகாரிகள் சமர்ப்பித்த தொழில்நுட்ப ரீதியான விடயங்கள் குறித்து ஒருபோதும் திருப்தியடைய முடியாது என்று குழுவின் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.
வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகள் மூலம் நிதி ஒதுக்கப்பட்ட போதிலும், திட்டங்கள் தொடர்ச்சியாக தாமதமாவதாலும், அதன் விளைவாக இறுதியில் அந்த நிதியை மீண்டும் திறைசேரிக்கு அனுப்ப வேண்டிய நிலை ஏற்படுவதாலும் அது வருத்தமளிப்பதாகத் தெரிவித்த குழு, அது தொடர்பாக தனது அதிருப்தியை வெளியிட்டது.
அதற்கமைய, தாமதமான தொழில்நுட்ப ரீதியான பதில்களாக அல்லாமல், திகதி மற்றும் காலக்கெடுவுடன் சரியான திட்டங்களைச் சமர்ப்பிக்குமாறு புகையிரதத் திணைக்கள அதிகாரிகளுக்கு குழு அறிவித்தது.
வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்துவதன் முன்னேற்றத்தைக் கண்டறிய புகையிரதத் திணைக்களம், இலங்கை போக்குவரத்து சபை உட்பட தேவையான நிறுவனங்கள் மீண்டும் குழுவிற்கு அழைக்கப்படும் என்றும், அவ்வாறு வரும்போது சரியான அனைத்துத் தகவல்களுடன் வருமாறும் அதிகாரிகளுக்கு இங்கு அறிவுறுத்தப்பட்டது.
நெடுஞ்சாலைகள் மற்றும் கிராமியப் பாலங்கள் புனரமைப்பு, புதிய பஸ் வண்டிகளை கொள்வனவு செய்தல், நகர அபிவிருத்தி அதிகாரசபையுடன் தொடர்புடைய கொழும்பு அடுக்குமாடிக் குடியிருப்புகளை புனரமைப்பு செய்தல் உள்ளிட்ட தற்போதைய பிரச்சினைகள், வலுசக்தித் துறையின் எதிர்கால இலக்குகள் உள்ளிட்ட இந்த நான்கு அமைச்சுகளின் வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளின் முன்னேற்றம் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன், குழுவால் இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்டதன்படி, காலி துறைமுகத்தை இலாபகரமான நிலைக்குக் கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறு தொடர்பான அறிக்கையை விரைவாகச் சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும், இதற்கு முன்னர் குழுவில் வெளிப்படுத்தப்பட்டதற்கு அமைய, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் செயற்திறன் குறித்து தனது பாராட்டைத் தெரிவிப்பதாகவும் குழுவின் தலைவர் தெரிவித்தார்.
குழுவின் பாராளுமன்ற உறுப்பினர்களான நளின் பண்டார ஜயமஹ, மஞ்சுள சுரவீர ஆராச்சி, ரவீந்திர பண்டார, ஜகத் வித்தான, சாந்த பத்ம குமார சுபசிங்க மற்றும் (சட்டத்தரணி) கீதா ஹேரத் ஆகியோர் இந்தக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

