
இலங்கையின் மீட்பு முயற்சிகளுக்கு 35 மில்லியன் அமெரிக்க டொலர்கள் திரட்ட ஐ.நா முயற்சி
டித்வா புயலால் ஏற்பட்ட பேரழிவுக்குப் பிறகு, அடுத்த நான்கு மாதங்களில் இலங்கையின் மீட்பு முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்காக 35 மில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்டும் நடவடிக்கையை ஐக்கிய நாடுகள் சபை முன்னெடுத்து வருவதாக, இலங்கைக்கான ஐ.நா. வதிவிட பிரதிநிதி மார்க்–ஆண்ட்ரே ஃபிரான்சே தெரிவித்துள்ளார்.
இன்று (11) கொழும்பில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் உரையாற்றிய அவர், புயலின் விளைவாக நாடு முழுவதும் ஏற்பட்ட தீவிர சேதங்களை முன்னிட்டு, ஐ.நா. பேரிடர் முகாமைத்துவ நிலையத்துடன் இணைந்து ஏழு முக்கிய துறைகளை உள்ளடக்கிய முன்னுரிமைப் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு இலங்கை அரசு தலைமை தாங்கி வரும் நிலையில், ஐ.நா. மற்றும் உள்ளூர், சர்வதேச பங்காளிகள் பல துறைகளில் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்றும் அவர் கூறினார்.
இந்த முயற்சிக்காக அவுஸ்திரேலியா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம், சுவிட்சர்லாந்து, ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் ஆதரவுடன், ஐ.நா. ஏற்கனவே 9.5 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற்றுள்ளதாகவும், ஒருங்கிணைக்கப்பட்ட திட்டத்தின் மூலம் வரும் மாதங்களில் மேலும் 26 மில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்டவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மார்க்–ஆண்ட்ரே ஃபிரான்சே தெரிவித்துள்ளார்.

