
இளைஞர் இயக்க தலைவர் ஒஸ்மான் ஹாடியின் படுகொலையை தொடர்ந்து பங்களாதேஷில் மீண்டும் வன்முறை
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவி நீக்கம் செய்த இளைஞர் இயக்கத்தின் முக்கிய தலைவரான ஷெரிப் ஒஸ்மான் பின் ஹாடி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து பங்களாதேஷில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது .
கடந்த வாரம் டாக்காவில் உள்ள ஒரு மசூதியிலிருந்து வெளியேறும்போது ஷெரிப் ஒஸ்மான் ஹாடி அடையாளம் தெரியாத ஒரு துப்பாக்கிதாரியால் சுடப்பட்டார்.
இதனையடுத்து சிங்கப்பூரில் உள்ள ஒரு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அவர் உயிரிதந்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவி நீக்கம் செய்யு வலியுறுத்திய இளைஞர் போராட்டத்திற்கு பின்னர் பங்களாதேஷ் 2026 தேர்தலுக்கான திகதியை அறிவித்திருந்தது.
அதற்கு மறுநாள் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
சமபவத்தில் உயிரிழந்த இளைஞர் போராட்டக் குழுவின் தலைவர் ஒஸ்மான் ஹாடி 2026 பெப்ரவரியில் நடைபெறும் தேசிய தேர்தலில் ஒரு சுயேச்சை வேட்பாளராக போட்டியிட முடிவு செய்திருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரின் மரணம் குறித்த செய்தி வெளியானதும், நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் தலைநகர் டாக்காவில் கூடி போராட்டங்களைத் தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் அவர்கள் பங்களாதேஷின் முன்னணி செய்தித்தாள்களான தி டெய்லி ஸ்டார் மற்றும் புரோதோம் அலோவின் அலுவலகங்களை கடுமையாக சேதப்படுத்தியதுடன் மேலும் ஒரு கட்டடத்திற்கு தீ வைத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பாதுகாப்புப் படையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் கட்டடத்தில் சிக்கிய பத்திரிகையாளர்களை மீட்டுள்ளனர்.
32 வயதான ஹாடி, இன்குலாப் மஞ்சா ( Inquilab Manja ) என்ற மாணவர் போராட்டக் குழுவின் சிரேஷ்ட தலைவராகவும், அண்டை நாடான இந்தியாவை கடுமையாக விமர்சிப்பவராக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷின் தற்போதைய இடைக்கால அரசாங்கத்தின் தலைவரான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ், குறித்த மாணவர் போராட்டக் குழுவின் தலைவர் ஹாடியின் மரணம் “நாட்டிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு” என்று கூறியுள்ளார் .
துப்பாக்கிச் சூடு ஒரு திட்டமிட்ட தாக்குதல் என்றும், தேர்தலுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதே சதித்திட்டக்காரர்களின் நோக்கம் என்றும் அவர் கூறினார்.
தற்போதுள்ள பங்களாதேஷ் இடைக்கால அரசாங்கம் நாளை (20) தேசிய துக்க நாளாக அறிவித்துள்ளது.
இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாகச் சில நபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
பல வாரங்களாக நீடித்த மாணவர் போராட்டங்களைத் தொடர்ந்து, 15 வருட கால சர்வாதிகார ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து, ஹசீனா கடந்த வருடம் ஆகஸ்ட் 5 ஆம் திகதி இந்தியாவிற்குத் தப்பிச் சென்றார்.
இந்தப் போராட்டங்களின் போது ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

