
காலி மாநகர சபை விசேட கூட்டத்தில் பதற்றம்
காலி மாநகர சபையில் இன்று (30) நடைபெற்ற விசேட பொதுச் சபைக் கூட்டத்தின் போது பெரும் பதற்ற நிலைமை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மாநகர மேயர் சபையை ஆரம்பித்ததையடுத்து, சபையின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இதன் காரணமாக சபை மண்டபத்தில் அமைதியற்ற சூழல் உருவானது.
இதனிடையே, “திருடன், திருடன்; எமது வாக்குகளை கொள்ளையடித்தான்” என கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒருமித்த குரலில் கோஷமிட்டதாக கூறப்படுகிறது. அதையும் பொருட்படுத்தாமல், மேயர் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய சபை நடவடிக்கைகளை முன்னெடுத்துச் சென்றார்.
பின்னர் குழுநிலை அமர்வு அறிவிக்கப்பட்டதும், கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் தண்ணீர் போத்தல்களை எறிந்து தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் சபை மண்டபத்தில் பதற்றம் மேலும் அதிகரித்தது.
நிலைமை கட்டுக்கடங்காத நிலையில் மாறியதையடுத்து, மேயர் சபையை அரை மணி நேரத்திற்கு ஒத்திவைப்பதாக அறிவித்து, சபையிலிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

