
வேகப் பந்துவீச்சு ஆலோசகராக லசித் மலிங்க நியமனம்
இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சு ஆலோசகராக, அந்த அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் லசித் மலிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர், வரும் பெப்ரவரி 7ஆம் திகதி ஆரம்பமாகி மார்ச் 8ஆம் திகதி வரை இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளது.
இந்த தொடருக்காக அனைத்து அணிகளும் தயாராகி வரும் நிலையில், போட்டியை நடத்தும் நாடுகளில் ஒன்றான இலங்கை, தங்களின் வேகப் பந்துவீச்சு ஆலோசகராக லசித் மலிங்காவை செவ்வாய்க்கிழமை (30) நியமித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் சபை தரப்பின் தகவலின்படி, லசித் மலிங்கா 2027ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் திகதி வரை இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சு ஆலோசகராக பணியாற்றவுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மலிங்கா பெற்றுள்ள நீண்ட அனுபவம், எதிர்வரும் ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு பெரும் உதவியாக இருக்கும் என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இலங்கை அணிக்காக 84 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள லசித் மலிங்கா, மொத்தமாக 107 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். தற்போது 42 வயதாகும் அவர், பல்வேறு டி20 லீக் தொடர்களில் அணிகளுக்கு பயிற்சி அளித்த அனுபவம் கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

