
2026 புத்தாண்டை உலகிலேயே முதலில் வரவேற்ற கிரிட்டிமாட்டி தீவு
உலகம் முழுவதும் 2026 ஆம் ஆண்டை வரவேற்கும் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ள நிலையில், பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள கிரிபாட்டி (Kiribati) குடியரசின் கிரிட்டிமாட்டி தீவு (Kiritimati Island) உலகிலேயே முதன்முதலாக புத்தாண்டை வரவேற்றுள்ளது.
பல நேர வலயங்களை கொண்ட கிரிபாட்டி நாட்டின் கிரிட்டிமாட்டி தீவு, சர்வதேச திகதி கோட்டிற்கு மிக அருகில் (UTC+14) அமைந்துள்ளதன் காரணமாக, உலகிலேயே முதன்முதலாக புத்தாண்டு பிறக்கும் இடமாக திகழ்கிறது.
இலங்கை நேரப்படி இன்று மாலை 3.30 மணியளவில், கிரிட்டிமாட்டி தீவில் நள்ளிரவு 12 மணி அடித்து 2026 புத்தாண்டு பிறந்தது.
‘கிறிஸ்மஸ் தீவு’ என்றும் அழைக்கப்படும் இந்தத் தீவில் வசிக்கும் மக்கள், வாணவேடிக்கைகள் மற்றும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் 2026 ஆம் ஆண்டை உற்சாகமாக வரவேற்றனர்.
கிரிபாட்டியைத் தொடர்ந்து டோங்கா, சமோவா மற்றும் நியூசிலாந்தின் சத்தம் தீவுகள் (Chatham Islands) அடுத்தடுத்து புத்தாண்டை வரவேற்கவுள்ளன.
இதனைத் தொடர்ந்து இன்னும் சில மணிநேரங்களில் அவுஸ்திரேலியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஆரம்பமாகவுள்ளன.
உலகிலேயே கடைசியாக, அமெரிக்காவிற்கு அருகிலுள்ள மக்கள் வசிக்காத பேக்கர் மற்றும் ஹவ்லேண்ட் தீவுகளில் புத்தாண்டு பிறக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

