
நாடளாவிய விசேட சுற்றிவளைப்பு ; மதுபோதையில் வாகனம் ஓட்டிய 392 பேர் கைது
நாடளாவிய ரீதியில் நேற்று (30) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, மதுபோதையில் வாகனங்களை செலுத்தியமை தொடர்பில் 392 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பொலிஸ் அதிகாரிகள், இராணுவ வீரர்கள், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் கடற்படை வீரர்கள் இணைந்து இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
இதனிடையே, குறித்த நடவடிக்கையின் போது பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையதாகக் கருதப்பட்ட 24 பேர் ஆதாரங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சந்தேகத்தின் பேரில் 1,142 பேர் பிடியாணையின்றி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
மேலும், பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த 276 பேரும், திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த 176 பேரும் இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கவனக்குறைவாக வாகனங்களை செலுத்தியமை தொடர்பில் 44 சாரதிகளும், ஏனைய போக்குவரத்து விதிமுறைகளை மீறியமை தொடர்பில் 4,342 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

