
வெனிசுலாவின் இடைக்கால ஜனாதிபதியாக பதவி ஏற்றார் டெல்சி ரோட்ரிக்ஸ்
கடந்த ஜனவரி 3 ஆம் திகதி அமெரிக்க ராணுவம் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின் போது, வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டனர்.
அதன் பின்னர் அவர் வெனிசுலாவிலிருந்து வெளியேற்றப்பட்டு, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஆர். புரோக்லின் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிக்கோலஸ் மதுரோவுக்கு எதிரான வழக்கை மார்ச் 17 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ள நீதிமன்றம், அன்றைய தினம் அவர் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இந்தச் சூழ்நிலையில், வெனிசுலாவின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்த நிலையில், அந்நாட்டின் துணை ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸை இடைக்கால ஜனாதிபதியாக நியமிப்பதாக வெனிசுலா நீதிமன்றம் அறிவித்தது.
அதனைத் தொடர்ந்து, டெல்சி ரோட்ரிக்ஸ் வெனிசுலாவின் இடைக்கால ஜனாதிபதியாக பாராளுமன்றக் கட்டிடத்தில் பதவியேற்றார்.
அவருக்கு, அவரது சகோதரரும் தேசிய சட்டமன்றத் தலைவருமான ஜார்ஜ் ரோட்ரிக்ஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பதவியேற்பு நிகழ்வின் போது உரையாற்றிய டெல்சி ரோட்ரிக்ஸ், “எங்கள் தாயகத்திற்கு எதிரான சட்டவிரோத இராணுவ ஆக்கிரமிப்பினால் வெனிசுலா மக்கள் எதிர்கொண்ட துன்பங்களுக்கு நான் ஆழ்ந்த வருத்தத்துடன் இந்தப் பொறுப்பை ஏற்கிறேன்” என வலது கையை உயர்த்தி உறுதிமொழி எடுத்தார்.

