
ஆஸ்திரியாவின் ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் தொடர் பனிச்சரிவுகள்
ஆஸ்திரியாவின் ஆல்ப்ஸ் மலைப் பகுதிகளில் பனிச்சறுக்கு சாகச விளையாட்டுகள் பிரபலமாக உள்ள நிலையில், சமீப நாட்களாக தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் கடும் பனிச்சரிவுகள் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.
இதனையடுத்து, அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருந்த போதும், விபத்துகள் தொடர்கின்றன.
இந்நிலையில், ஆஸ்திரியாவின் ஸ்டைரியா மாகாணம் முர்தல் மாவட்டத்தில் செக் நாட்டைச் சேர்ந்த 7 பேர் அடங்கிய சுற்றுலா குழு பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது, திடீரென ஏற்பட்ட பனிச்சரிவில் அவர்கள் சிக்கிக்கொண்டனர்.
சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்தவுடன் அவசரகால மீட்பு குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். எனினும், இதில் 3 பேர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, சால்ஸ்பர்க் அருகேயுள்ள பொங்காவ் நகரில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட மற்றொரு பனிச்சரிவில் 7 பேர் சிக்கிக்கொண்டனர்.
அவர்களில் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் பின்னர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அதே பகுதியில், அதே நாளில் ஏற்பட்ட மற்றொரு பனிச்சரிவில் சிக்கிய பனிச்சறுக்கு வீரர் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து பொங்காவ் மலைப்பிரதேச மீட்பு குழுவின் மாவட்ட தலைவர் ஜெரார்டு கிரெம்சர் கருத்து தெரிவிக்கையில், “எண்ணற்ற பனிச்சரிவுகள் ஏற்படக்கூடும் என தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறோம். இருந்த போதும், துரதிர்ஷ்டவசமாக மீண்டும் விபத்துகள் நிகழ்ந்து பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன” என தெரிவித்துள்ளார்.
மேலும், சுவிட்சர்லாந்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பனிச்சரிவில் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்ததுடன், 4 பேர் காயமடைந்துள்ளனர்.
அதேபோல், பிரான்சில் கடந்த வாரம் 6 பனிச்சறுக்கு வீரர்கள் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ச்சியாக நிகழும் இந்த விபத்துகள், ஆல்ப்ஸ் மலைப் பகுதிகளில் நிலவும் அபாயகரமான சூழலை மேலும் வெளிப்படுத்தி வருவதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

