
கலஹா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பாறைக்கு வர்த்தக பெறுமதி இல்லை ; தேசிய இரத்தினக்கல் அதிகார சபை
கண்டி, கலஹா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பாறைக்கு அதிக வர்த்தக அல்லது சந்தை பெறுமதி (commercial or market value) இல்லை என தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபை அறிவித்துள்ளது.
அந்த அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
குறித்த பாறையின் தாய்ப் பாறைக்குள் “லெப்ரடோரைட்” (Labradorite) எனப்படும் கனியத்தின் சிறிய அளவு மட்டுமே படிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லெப்ரடோரைட் கனியம், ஒரு வகையான அரை-பெறுமதி வாய்ந்த இரத்தினக்கல் பாறையாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், குறித்த பாறைக்கு உயர்ந்த வர்த்தக அல்லது சந்தை பெறுமதி இல்லை என தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபை தெளிவுபடுத்தியுள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்னர், கண்டி – கலஹா, தெல்தோட்டை தோட்டத்தில் அமைந்துள்ள கல்லந்தென்ன ஸ்ரீ முத்து மாரி அம்மன் ஆலயத்திற்கு அருகிலுள்ள கருங்கற்பாறை ஒன்றில் நீல நிற இரத்தினக்கல் இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதனைத் தொடர்ந்து, அந்தப் பாறையை பரிசோதிப்பதற்காக நேற்று (21) இரவு தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபையின் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விஜயம் செய்தனர்.
அவர்கள் அந்தப் பாறையிலிருந்து மூன்று மாதிரித் துண்டுகளை எடுத்துப் பரிசோதனைக்கு உட்படுத்தியதன் அடிப்படையிலேயே, இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக அதிகார சபை தெரிவித்துள்ளது.

