
ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை
நிலவும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், சட்டரீதியாக தங்களுக்கு உரித்தான தொழில்சார் உரிமைகளின் அடிப்படையில் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க நேரிடும் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
ரயில்வே திணைக்களத்தில் தொடர்ந்து நிலவும் நிர்வாக வினைத்திறனின்மை காரணமாக, பயணிகள் மட்டுமன்றி ரயில் ஊழியர்களும் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக, அந்தச் சங்கம் ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.
ரயில் நிலைய அதிபர்களைச் சேர்ப்பது மற்றும் பதவி உயர்வு வழங்குவது தொடர்பான அவசியமான ஆட்சேர்ப்பு நடைமுறைகளுக்கான இடைக்கால ஏற்பாடுகளைத் தயாரித்து நடைமுறைப்படுத்துவதில் தொடர்ச்சியான தாமதம் நிலவி வருவதாகவும், இதன் விளைவாக ரயில் நிலைய அதிபர்களின் கடமை வினைத்திறனும், ஊழியர்களின் மனநிலையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அரசாங்கத்தினால் அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் அனர்த்தக் கடன் தொகை ரூ. 400,000/- வரை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், ரயில்வே திணைக்களம் அதனை ரூ. 250,000/- ஆகக் குறைத்து வழங்க தீர்மானித்திருப்பது பாரிய பிரச்சினையாகும் என அந்தச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தத் தீர்மானம் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ கொள்கை முடிவை நேரடியாக அவமதிப்பதாக அமைவதோடு, ரயில் ஊழியர்களுக்கு இழைக்கப்படும் பாரிய அநீதி என்றும், அதற்கு எதிராக கடும் எதிர்ப்பை வெளியிடுவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ரயில் சேவையை முறையாகத் திட்டமிடாதமை, கால அட்டவணைகளின் சீர்குலைவு மற்றும் செயற்பாட்டு பலவீனங்கள் காரணமாக நாளுக்கு நாள் பயணிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும், இந்த நிலைமைக்குத் திணைக்கள நிர்வாகமே நேரடியாகப் பொறுப்பேற்க வேண்டும் எனவும் ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

