பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் தலைமையில் PDNA கூட்டம் நடைபெற்றது‍

பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் தலைமையில் PDNA கூட்டம் நடைபெற்றது‍

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையில், அனர்த்தத்திற்கு பிந்தைய தேவைகள் மதிப்பீடு (Post Disaster Needs Assessment – PDNA) தொடர்பான கூட்டம் பெப்ரவரி 6 அன்று பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது. முக்கிய பங்குதார நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.

PDNA செயல்முறை, அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) தேசிய திட்டமிடல் திணைக்களம் (NPD) மற்றும் பிற தேசிய-சர்வதேச அபிவிருத்தி பங்காளிகளுடன் இணைந்து முன்னெடுக்கப்படுகிறது. உட்கட்டமைப்பு சேதங்கள், பொருளாதார இழப்புகள் மற்றும் சமூக தாக்கங்கள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் ஏற்பட்ட பாதிப்புகளை நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் முறையாகத் தரவுச் சேகரிப்பு, பகுப்பாய்வு மற்றும் மதிப்பீடு செய்வதே இச்செயல்முறையின் நோக்கமாகும்.

image

சமீபத்தில் நாட்டின் பல பகுதிகளில் உயிர், வாழ்வாதாரம், உட்கட்டமைப்பு மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு பரவலான சேதத்தை ஏற்படுத்திய ‘டிட்வா’ புயலின் தாக்கங்கள் தொடர்பான ஆரம்ப நிலை PDNA தரவுகளை முன்வைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது.

அவசர நிவாரண நடவடிக்கைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மீட்பு, மறுசீரமைப்பு மற்றும் நீண்டகால மறுசீரமைப்புக்கான கட்டத்தை எளிதாக்க PDNA செயல்முறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தில் உரையாற்றிய பிரதி அமைச்சர், ‘Rebuilding Sri Lanka’ ஜனாதிபதி பணிக்குழு திட்டத்துடன் இசைவாக வலுவான மீட்பு செயல்முறையை உருவாக்குவதற்காக PDNA மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார். மேலும், எட்டு உபகுழுக்களை உள்ளடக்கிய அந்தப் பணிக்குழுவில், PDNA குழு முதன்மையான குழுவாக இருந்து, அதன் தலைமையின் கீழ் மற்ற குழுக்களை மேற்பார்வை செய்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

image

நியமிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் இலக்குகளை அடைவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து குழு விரிவான கலந்துரையாடலை நடத்தியது. சேதங்கள் மற்றும் இழப்புகளின் ஆரம்ப மதிப்பீடுகள், மீட்பு தேவைகளின் கணக்கீடு, அபிவிருத்தி பங்காளிகள் வழங்கவுள்ள ஆதரவின் தன்மை, மற்றும் ஒருங்கிணைப்பு சவால்கள் தொடர்பில் பிரதானமாக ஆராயப்பட்டது.

நாட்டிற்கு அபாயம்-தகவல் அடிப்படையிலான, தாங்குத்தன்மை கொண்ட, நிலைத்த மீட்பு திட்டத்தை உருவாக்க PDNA செயல்முறையை மேலும் வலுப்படுத்த தொடர்ச்சியான நிறுவனங்களுக்கிடையிலான ஒத்துழைபின் அவசியம் இதன்போது முக்கியமாக வலியுறுத்தபட்டது.

image

இந்தக் கூட்டத்தில் பாதுகாப்புச் செயலாளர், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் (DMC) பணிப்பாளர் நாயகம், இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் குடியிருப்பு ஒருங்கிணைப்பாளர், ஐரோப்பிய ஒன்றியம் (EU), உலக வங்கி (WB), ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB), ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம் (UNDP), ஆசிய அனர்த்த தயார்படுத்தல் மையம் (ADPC), தேசிய திட்டமிடல் திணைக்களம் (NPD) ஆகியவற்றின் பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய அமைச்சுகளின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )