
புத்தர் சிலைகளின் தங்க முலாம் பூசப்பட்ட கலசங்களைத் திருடிய இரண்டு பேர் கைது
புத்தர் சிலைகளின் நெற்றியில் பொருத்தப்பட்டிருந்த தங்க முலாம் பூசப்பட்ட கலசங்களைத் திருடியதாக சந்தேகத்தின் பேரில், இரண்டு சந்தேக நபர்கள் இன்று (08) நாவலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல ஆலயங்களில் அமைந்துள்ள புத்தர் சிலைகளின் நெற்றியில் காணப்படும் கலசங்களை குறித்த சந்தேக நபர்கள் திருடியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், முச்சக்கர வண்டியில் வந்து நாவலப்பிட்டியிலுள்ள கெட்டபுலாவ ஆலயத்தில் உள்ள புத்தர் சிலையின் நெற்றியில் இருந்து தங்க முலாம் பூசப்பட்ட கலசத்தைத் திருடும் காட்சிகள், ஆலயத்தில் பொருத்தப்பட்ட பாதுகாப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.
அந்தக் காணொளி பதிவுகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொண்ட விசாரணைகளின் போது, நாவலப்பிட்டி பொலிஸார் குறித்த இரு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.
கைதானவர்கள் 45 முதல் 50 வயதுக்கிடைப்பட்ட பிலிமதலாவ பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் புத்தர் சிலைகளின் தலைப்பகுதியை சேதப்படுத்தி, இலங்கை முழுவதிலும் உள்ள பல ஆலயங்களுக்குச் சென்று கலச நினைவுச் சின்னங்களைத் திருடியுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
மேலும், திருடப்பட்ட கலசங்களிலிருந்து உருக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் தங்கத்தின் ஒரு தொகையும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
குறிப்பாக குருநாகல் மற்றும் பிலிமதலாவ பகுதிகளில் தங்கப் பொருட்களை விற்பனை செய்யும் தனியார் நிறுவனமொன்றின் மூலம், சந்தேக நபர்களிடமிருந்து பெறப்பட்ட தங்கம் உருக்கப்பட்டு விற்கப்பட்டுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனுடன், குற்றச்செயலுக்குப் பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், அவர்களை நாவலப்பிட்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

