Gen Z புரட்சிக்குப் பின் பங்களாதேஷில் நடைபெறும் முதல் பொதுத் தேர்தல்

Gen Z புரட்சிக்குப் பின் பங்களாதேஷில் நடைபெறும் முதல் பொதுத் தேர்தல்

பங்களாதேஷில் புதிய அரசாங்கத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத் தேர்தல் தற்போது ஆரம்பமாகியுள்ளது.

விடுதலைப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்ற அரசின் அறிவிப்புக்கு எதிராக நாடு முழுவதும் ஏற்பட்ட போராட்டங்களின் பின்னணியில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறினார்.

அதனைத் தொடர்ந்து, நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டு, நாட்டின் சட்ட ஒழுங்கு நிலையை சீரமைப்பதுடன், தேர்தல் முறைமைகளில் திருத்தங்களை மேற்கொண்டு வந்தது.

இந்த நிலையில், பங்களாதேஷில் தற்போது நடைபெறும் இந்த பொதுத் தேர்தலில், சுமார் 12 கோடி 70 லட்சம் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்ய உள்ளனர்.

மொத்தமாக 300 தொகுதிகளுக்கு நேரடி தேர்தல் நடைபெறுகிறது.

இதற்கு மேலாக, பெண்களுக்காக 50 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த 50 இடங்களுக்கு நேரடி தேர்தல் நடத்தப்படாமல், பொதுத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் 300 நாடாளுமன்ற உறுப்பினர்கள், விகிதாச்சார அடிப்படையில் பெண் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பார்கள்.

இதனுடன் இணைந்து, இந்த தேர்தலோடு சேர்த்து தேசிய பொது வாக்கெடுப்பும் நடத்தப்படுகிறது.

நாட்டின் அரசியலமைப்பில் அடிப்படை மாற்றங்களைச் செய்ய உருவாக்கப்பட்டுள்ள “ஜூலை தேசிய சாசனம்” தொடர்பில் மக்களின் கருத்தை அறியவே இந்த பொது வாக்கெடுப்பு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்த தேர்தல், பங்களாதேஷின் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுவதுடன், நாட்டின் எதிர்கால அரசியல் திசையை தீர்மானிக்கும் தேர்தலாக கருதப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )