
கராச்சியில் நடைபெற்ற பொதுநலவாய பாராளுமன்ற மாநாட்டில் இலங்கைத் தூதுக்குழு பங்கேற்பு
பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் கராச்சி நகரில் பெப்ரவரி 3ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரை நடைபெற்ற பொதுநலவாய பாராளுமன்ற ஒன்றியத்தின் (CPA) 7வது ஆசிய பிராந்திய மாநாடு மற்றும் ஆசிய, தென்கிழக்கு ஆசிய பிராந்தியங்களின் இணைந்த இரண்டாவது மாநாட்டில் இலங்கைப் பாராளுமன்றத் தூதுக்குழு பங்கேற்றது.
“பாராளுமன்றங்களின் எதிர்காலம்: நம்பிக்கை, உள்ளடக்கம், புத்தாக்கம் மற்றும் சமாதானம் என்பவற்றின் ஊடாக ஜனநாயகத்தை மறுவரையறை செய்தல்” என்ற தொனிப்பொருளில் பாகிஸ்தானின் சிந்து மாநில சட்டமன்றத்தினால் இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கௌரவ பிரதி சபாநாயகரும், குழுக்களின் தவிசாளருமான (வைத்தியர்) ரிஸ்வி சாலி தலைமையிலான இலங்கைத் தூதுக்குழுவில் கௌரவ வலுசக்தி பிரதியமைச்சர் அர்கம் இலியாஸ் மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் அஜித் அகலகட, சுஜீவ திசாநாயக்க, சுஜித் சஞ்சய பெரேரா ஆகியோர் இணைந்திருந்தனர்.
அங்குரார்ப்பண நிகழ்வில் பாகிஸ்தானின் தேசிய பேரவையின் சபாநாயகர் சர்தார் அயாஸ் சாதிக் பங்கேற்றார். பாகிஸ்தான், மாலைதீவு, மலேசியா உள்ளிட்ட பல்வேறு ஆசிய மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து தலைமை அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

“சமாதானம் மற்றும் ஜனநாயக நம்பிக்கை: நல்லிணக்கத்திற்கான இயந்திரமாகப் பாராளுமன்றம்” என்ற தலைப்பிலான அமர்வில் உரையாற்றிய பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி, சமீபத்திய பொருளாதார மற்றும் அரசியல் சவால்களைத் தொடர்ந்து ஜனநாயக நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்பிய இலங்கையின் அனுபவத்தை பகிர்ந்துகொண்டார். வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், இளைஞர் பங்கேற்பு, ஊழல் எதிர்ப்பு செயல்முறைகள் ஆகியவற்றை வலுப்படுத்தும் நிறுவனங்களாக நவீன பாராளுமன்றங்கள் செயல்பட வேண்டிய அவசியத்தை அவர் வலியுறுத்தினார். நீடித்த சமாதானத்திற்கும் ஜனநாயக நிலைத்தன்மைக்கும் நல்லிணக்கமும் நம்பிக்கையும் அடிப்படை அம்சங்களாக இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

“பாராளுமன்றக் கல்வி: நாளாந்த வாழ்க்கையில் ஜனநாயகக் கொள்கைகளை ஆழமாகப் பதியச்செய்தல்” என்ற அமர்வில், இலங்கையின் கட்டமைக்கப்பட்ட பிரஜைகள் கல்வி அமைப்பு, மாணவர் மற்றும் இளைஞர் பாராளுமன்ற முயற்சிகள், பொதுமக்கள் தொடர்பாடல் நடவடிக்கைகள் குறித்து அவர் விளக்கமளித்தார்.
மேலும் “போலியான செய்திகள், செயற்கை நுண்ணறிவு மற்றும் தவறான தகவல்கள்”, “காலநிலை மாற்றத்திற்கான சட்டமியற்றல் மற்றும் பாதிக்கப்படக்கூடியோரின் குரல்கள்”, “பாலினம், தொழில்நுட்பம் மற்றும் ஒன்லைன் வன்முறை” போன்ற தலைப்புகளில் நடைபெற்ற அமர்வுகளில் பிரதியமைச்சர் அர்கம் இலியாஸ் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று கருத்துக்களைப் பகிர்ந்தனர்.

இறுதிநாள் அமர்வில் நன்றியுரை ஆற்றிய பிரதி சபாநாயகர், மாநாட்டின் சிறப்பான ஏற்பாடுகளுக்கும் விருந்தோம்பலுக்கும் நன்றி தெரிவித்தார். கராச்சியில் உருவான ஒத்துழைப்பு பொதுநலவாய நாடுகளின் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மாநாட்டின் நிறைவில், ஜனநாயக ஆட்சி, அரசியலமைப்புச் சட்டத்தின் மேலாதிக்கம், பாராளுமன்ற பொறுப்புக்கூறல், உள்ளடங்கலான நிர்வாகம் மற்றும் நீடித்த சமாதானத்திற்கான கூட்டு அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் “கராச்சி பிரகடனம்” ஏற்றுக்கொள்ளப்பட்டது. தவறான தகவல் பரவல், சமூக ஒதுக்கல், காலநிலை மாற்றம் மற்றும் அதிவேக தொழில்நுட்ப மாற்றம் போன்ற சவால்களை எதிர்கொள்வதில் ஒத்துழைப்பும் பாராளுமன்ற இராஜதந்திரமும் அவசியம் என பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.

