
மீன்பிடித் துறையில் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் துறைசார் மேற்பார்வைக் குழுவின் கவனத்திற்கு
தித்வா சூறாவளியினால் மீன்பிடித் துறையில் ஏற்பட்ட தாக்கம் மற்றும் அவற்றை வழமைக்குக் கொண்டுவருவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.
சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி அவர்களின் தலைமையில் 2026.02.05 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோது இது குறித்துக் கலந்துரையாடப்பட்டது.
இதில் இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம், இலங்கை தேசிய நீரியல் வளங்கள் அபிவிருத்தி அதிகாரசபை, மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் உள்ளிட்ட கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு மற்றும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இங்கு அந்தந்த நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி வந்த அதிகாரிகளுடன் தித்வா சூறாவளியினால் ஏற்பட்ட தாக்கம் குறித்து விரிவாகக் கலந்துரையாடிய குழுவின் தலைவர், இது தொடர்பான தரவுகள் அடங்கிய அறிக்கைகளைக் குழுவிடம் சமர்ப்பிக்குமாறு பரிந்துரைத்தார்.
மேலும், அந்தந்த நிறுவனங்களின் எதிர்காலச் செயற்பாட்டுத் திட்டங்களுக்கு அமைய இந்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குதல் மற்றும் நட்டஈடு வழங்கும் விதம் குறித்தும் இங்கு குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.
இதற்கமைய, அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை இழப்பீடு வழங்கப்பட்ட விதம் குறித்து இரண்டு வாரங்களுக்குள் அறிக்கையொன்றைக் குழுவிடம் சமர்ப்பிக்குமாறு குழுவின் தலைவர் பரிந்துரைத்தார்.
இந்தக் குழுக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான கின்ஸ் நெல்சன், சுதத் பலகல்ல, சுசந்த குமார நவரத்ன, அஜித் கிஹான் மற்றும் பி. ஆரியவன்ச ஆகியோர் கலந்துகொண்டனர்.

