கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பம்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பம்

2025ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை இன்று (17) ஆரம்பமானது.

இலங்கை பரீட்சை திணைக்களம் வெளியிட்ட தகவலின்படி, நாடு பூராகவும் அமைந்துள்ள 3,545 பரீட்சை மத்திய நிலையங்களில் 451,463 பரீட்சார்த்திகள் இம்முறை பரீட்சைக்குத் தோற்றுகின்றனர்.

சாதாரண தரப் பரீட்சையின் நேர அட்டவணை குறித்து விசேட கவனம் செலுத்துமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே பரீட்சார்த்திகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

பரீட்சார்த்திகள் குறைந்தது ஒரு மணித்தியாலத்திற்கு முன்பாக, அதாவது காலை 7.30 மணிக்குள் பரீட்சை நிலையங்களுக்கு வருகை தர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிற்பகல் பரீட்சை 1.30 மணிக்கு ஆரம்பமாகும் நிலையில், பரீட்சார்த்திகள் பகல் 12.30 மணிக்குள் நிலையங்களுக்கு சமூகமளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சை நிலையங்களுக்கு கையடக்கத் தொலைபேசிகள், புளூடூத் சாதனங்கள், ஸ்மார்ட் கடிகாரங்கள், குறிப்புகள் அல்லது ஏனைய ஆவணங்களை கொண்டு செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது.

மேலும், ஒவ்வொரு பரீட்சார்த்தியும் பரீட்சை முடியும் வரை தமது ஆள் அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும். பாடசாலை பரீட்சார்த்திகள் தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம் அல்லது கடவுச்சீட்டை பயன்படுத்தலாம்.

தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தேவையெனில் இரண்டு புகைப்படங்களுடன் கிராம உத்தியோகத்தரால் சான்றளிக்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டையை சமர்ப்பிக்கலாம்.

பரீட்சை மண்டபத்தில் ஒழுங்கு விதிகளைப் பேண வேண்டும். முகம் தெளிவாக அடையாளம் காணக்கூடிய வகையில் பரீட்சை நிலையங்களுக்கு வர வேண்டும். ஏனைய பரீட்சார்த்திகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டால், சில சந்தர்ப்பங்களில் பரீட்சை பெறுபேறுகள் ரத்து செய்யப்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இடைவேளை நேரங்களிலும் ஒழுங்கை கடைப்பிடிக்குமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )