
தேசபந்து மீதான விசாரணைக்குழுவின் நகர்வு
தேசபந்து அதிகார துஸ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு, நேற்று சாட்சியங்களின் சத்தியக்கடதாசிகளை பிரதிவாதியான பொலிஸ்மா அதிபர் தரப்புக்கு வழங்கியது
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தனது பதவித் தத்துவங்களை பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்து அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவினால் , சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதிகளினால் சாட்சியங்களின் சத்தியக்கடதாசிகள் பிரதிவாதியான பொலிஸ்மா அதிபர் தரப்புக்கு நேற்று வழங்கப்பட்டன.
உயர்நீதிமன்ற நீதியரசர் பி.பி. சூரசேனவின் , நீதிபதி டபிள்யூ.எம்.என்.பி. இத்தவல , தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஈ.டபிள்யூ.எம் லலித் ஏக்கநாயக்க ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட விசாரணைக்குழு நேற்று பாராளுமன்றத்தில் கூடிய போதே சாட்சியங்களின் சத்தியக்கடதாசிகள் வழங்கப்பட்டன.
பிரதிவாதி பொலிஸ்மா அதிபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி எஸ். வீரவிக்ரமவின் வீட்டுக்குச் சென்று கடந்த வார இறுதியில் சாட்சியங்களின் 12 சத்தியக்கடதாசிகளை வழங்க நடவடிக்கை எடுத்ததாக , சட்டமா அதிபர் திணைக்களத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி விசரணைக்குழுவில் இடம்பெற்ற மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் (ஜனாதிபதி சட்டத்தரணி) திலீப பீரிஸ் மற்றும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ரஜித பெரேரா ஆகியோர் இதன்போது சுட்டிக்காட்டினர்.
இன்று 10 சாட்சியங்களின் சத்தியக்கடதாசிகளை குழுவின் முன்னிலையில் பிரதிவாதி பொலிஸ்மா அதிபர் தரப்பினருக்கு வழங்கியதுடன், எஞ்சிய சத்தியக்கடதாசிகளை எதிர்வரும் குழுவின் அமர்வில் முன்வைக்க எதிர்பார்ப்பதாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
இதனடிப்படையில் முன்னர் இணங்கியதன் பிரகாரம் அனைத்து சாட்சியங்களினதும் சத்தியக்கடதாசிகளை இன்றைய தினம் வழங்குமாறு பிரதிவாதி பொலிஸ்மா அதிபர் தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.
பின்னர் இரு தரப்பினராலும் விடயங்கள் தெளிவுபடுத்தப்பட்டதை அடுத்து, 6 வாக்குமூலங்களின் சத்தியக்கடதாசிகளை பிரதிவாதி பொலிஸ்மா அதிபர் தரப்பினருக்கு வழங்குவது பொருத்தமானது என குழுவின் நிலைப்பாடாக இருந்ததுடன், அது தொடர்பில் இரு தரப்பினரதும் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், 2 சத்தியக்கடதாசிகளை இரு தரப்பினருக்கும் வாய்ப்பான தினமொன்றில், நேரத்தில் தனிப்பட்ட வகையில் பாராளுமன்றத்துக்கு வருகை தந்து பரிசீலிப்பதற்கு குழு அனுமதி வழங்கியது.
மற்றுமொரு சாட்சியமாக வழங்கப்பட்டுள்ள ஊடக சந்திப்பு ஒன்று தொடர்பான காணொலியின் இறுவெட்டை (CD) பிரதிவாதி பொலிஸ்மா அதிபர் தரப்பினருக்கு வழங்குவதற்கு குழு தீர்மானித்ததுடன், சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதிகள் அதனை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தனர்.
இந்த சாட்சியங்களின் சத்தியக்கடதாசிகள் தொடர்பான பிரதிவாதி பொலிஸ்மா அதிபர் தரப்பின் நிலைப்பாட்டு 9 ஆம் திகதி பி.ப. 2.00 மணிக்கு விசாரணைக்குழு கூடி முன்வைக்கப்படவுள்ளது.

