
பாராளுமன்றம் மார்ச் 03ஆம் திகதி முதல் 06ஆம் திகதிவரை கூடும்
பாராளுமன்றம் மார்ச் 03ஆம் திகதி முதல் 06ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். கடந்த 18ஆம் திகதி சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இது பற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டது.
இதற்கு அமைய 2026 மார்ச் 03ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணிவரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2) கீழான கேள்விகளுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர் மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணிவரை அந்நியச் செலாவணிச் சட்டத்தின் கீழ் 2467/67ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
அன்றையதினம் பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
2026 மார்ச் 04ஆம் திகதி புதன்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணிவரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மு.ப 10.00 மணி முதல் மு.ப 10.30 மணிவரை பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்காகவும், மு.ப 10.30 மணி முதல் மு.ப 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2) கீழான கேள்விகளுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அன்றையதினம் மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணிவரை ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
2026 மார்ச் 05ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணிவரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2) கீழான கேள்விகளுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரை மார்ச் 08ஆம் திகதி கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சபை ஒத்திவைப்பு விவாதத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
2026 மார்ச் 06ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணிவரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2) கீழான கேள்விகளுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து, மு.ப. 11.30 முதல் பி.ப. 5.00 மணிவரை தனியார் உறுப்பினர் பிரேரணைகள் தொடர்பான விவாதத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கீழ்வரும் தனியார் உறுப்பினர் பிரேரணைகள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி அவர்கள்- தேசிய விளையாட்டு அணியொன்றைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அல்லது தேசிய மட்ட சாதனையைப் படைத்துள்ள விளையாட்டு வீர வீராங்கனைகளுக்கு விளையாட்டுத்துறைக்குரிய ஏதேனும் பட்டப் பாடநெறியைப் பயில்வதற்கு வாய்ப்பினை வழங்குதல்.
சமிந்த விஜேசிறி அவர்கள் – வாழ்க்கைத்தொழில்சார் தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகம் தொடர்பில் பாடசாலை மாணவர்களை விழிப்பூட்டுவதற்கான நிகழ்ச்சித் திட்டமொன்றைத் தயாரித்தல்.
ரவி கருணாநாயக்க அவர்கள்- புலம்பெயர்ந்த ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை களுக்குத் தீர்வு காணச் சட்ட அதிகாரங்களுடன் அலகு ஒன்றைத் தாபித்தல்.
லால் பிரேமநாத் அவர்கள் – அடிமட்டத்தில் செயற்படும் நாட்டிலுள்ள சகல உள்ளூராட்சி அதிகாரசபைகள் தொடர்பிலும் மக்கள் கொண்டுள்ள அதிருப்தியை தணிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளல்.
ரோஹண பண்டார அவர்கள் – பேராசிரியர் பதவிகள் மற்றும் கலாநிதி பட்டங்களை தவறாக பயன்படுத்துவதை தடுப்பதற்கான வேலைத்திட்டமொன்றை தயாரித்தல்.
நலின் பண்டார ஜயமஹ அவர்கள் – பெற்றோலியம், எரிபொருள் மற்றும் நீர் ஆகியவற்றுடன் தொடர்புடைய கைத்தொழில்களை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஒழுங்குபடுத்தலின் கீழ் கொண்டு வருதல்.
ரவீந்திர பண்டார அவர்கள் – பைனஸ் செய்கையால் நீர் மூலங்கள் மற்றும் சூழலுக்கு ஏற்படுகின்ற பாதிப்புக்களைத் தடுப்பதற்கான முறையியலொன்றைத் தயாரித்தல்.
இதனைத் தொடர்ந்து பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை அரசாங்கத் தரப்பினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

