மின்னேரியாவில் மோட்டார் சைக்கிள் பாலத்திலிருந்து வீழ்ந்து விபத்து : தம்பதி படுகாயம்

மின்னேரியாவில் மோட்டார் சைக்கிள் பாலத்திலிருந்து வீழ்ந்து விபத்து : தம்பதி படுகாயம்

பொலன்னறுவை – கொழும்பு பிரதான வீதியின் மின்னேரியா, தாசயஹமார பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று பாலத்திலிருந்து கீழே வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் தம்பதியினர் இருவர் படுகாயமடைந்து பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (28) காலை 10:50 அளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

கதுருவெல, முஸ்லிம் காலனி பகுதியைச் சேர்ந்த தம்பதியினரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

இவர்கள் இருவரும் கதுருவெலயிலுள்ள தமது வீட்டிலிருந்து ஹபரணை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளி ஒருவரைப் பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோதே இந்த துரதிர்ஷ்டவசமான விபத்தை எதிர்கொண்டுள்ளனர்.

மின்னேரியா பகுதியில் கிரிதலே குளத்தின் வான் நீரை ஏந்திச் செல்லும் ‘திம்பிரி எல’ கால்வாயின் குறுக்கே அமைந்துள்ள பாலத்தில் பயணித்தபோது, மோட்டார் சைக்கிளைக் கட்டுப்படுத்த முடியாமல் சுமார் 20 அடி ஆழத்திலுள்ள கால்வாய்க்குள் வீழ்ந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக மின்னேரியா பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து நடந்தவுடன் அப்பகுதி மக்களும் அந்த வீதியால் பயணித்தவர்களும் இணைந்து கால்வாய்க்குள் விழுந்த தம்பதியினரை உடனடியாக மீட்டனர்.

காயமடைந்தவர்கள் ‘1990’ அவசர ஆம்புலன்ஸ் சேவை மூலம் பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களின் நிலைமை சற்று கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவருக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கம் காரணமாகவே இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக மின்னேரியா பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )