
ஈரானின் ஆரம்ப பாடசாலை மீதான இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை85ஆக உயர்வு – 63 பேர் படுகாயம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய “ஆபரேஷன் எபிக் ஃபியூரி” (Operation Epic Fury) தாக்குதலில், தெற்கு ஈரானில் உள்ள சிறுமிகளுக்கான ஆரம்பப் பாடசாலை மீதும் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் கடுமையான விமர்சனங்களுக்குள்ளாகியுள்ளது.
இந்த தாக்குதல் குறித்த விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது .
தெற்கு ஈரானின் ஹோர்முஸ்கான் (Hormozgan) மாகாணத்தில் உள்ள மினாப் (Minab) நகரில் அமைந்துள்ள ஒரு சிறுமிகளுக்கான ஆரம்பப் பாடசாலையில் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை,
85 ஆக உயர்ந்துள்ளதாக ஈரான் நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இவர்களில் பெரும்பாலானோர் அப்பாவிச் சிறுமிகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டட இடிபாடுகளுக்கு இடையில் இருந்து மீட்கப்பட்ட 63 பேர் படுகாயமடைந்துள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதேவேளை தலைநகர் தெஹ்ரானுக்கு கிழக்கே உள்ள மற்றொரு பாடசாலை மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் குறைந்தது இரண்டு மாணவர்கள் கொல்லப்பட்டதாக மெஹ்ர் (Mehr) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஈரானிய அரசு இந்தத் தாக்குதலை ஒரு “வெளிப்படையான போர்க்குற்றம்” என்று வர்ணித்துள்ளது:
“ஈரானிய மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இந்த அநீதிக்குப் பதில் சொல்லாமல் விடமாட்டோம். அப்பாவி குழந்தைகள் கொல்லப்பட்டதற்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை (UNSC) உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி தெரிவித்துள்ளார்.
மினாப் நகரம், உலக அளவில் எரிசக்தி போக்குவரத்திற்கு மிக முக்கியமான ஹோர்முஸ் நீரிணைக்கு (Strait of Hormuz) மிக அருகில் அமைந்துள்ளது. அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் ஈரானின் கடற்படைத் தளங்கள் மற்றும் ஏவுகணைத் தளங்களைக் குறிவைத்துத் தாக்கப்பட்ட போது அருகில் இருந்த இந்தப் பாடசாலை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

