
மகரகமையில் சீனாவின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படும் வீடமைப்புத் திட்டத்தை பிரதி அமைச்சர் பார்வையிட்டார்
கொழும்பு நகர்ப்புறவாசிகளின் வீட்டுப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் நோக்கில், சீன அரசாங்கத்தின் நிதி உதவியுடன் மகரகமையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய வீடமைப்புத் தொகுதியை, நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர கடந்த திங்கட்கிழமை (09) நேரில் சென்று பார்வையிட்டார்.
ஏழு மாடிகளைக் கொண்ட இந்தத் தொகுதி 112 அலகுகளைக் கொண்டுள்ளது.
1,020 மில்லியன் ரூபாசெலவில் இந்த கட்டடத்தொகுதி நிர்மாணிக்கப்படுகிறது.
தற்போது 39% பணிகள் நிறைவடைந்துள்ளன. 2026 ஆம் ஆண்டிற்குள் இதன் பணிகளை முழுமையாக எதிர்பார்க்கப்படுகிறது.
நகர அபிவிருத்தி அதிகார சபையின் முழுமையான மேற்பார்வையின் கீழ், சீனா ஹார்பர் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனம் (China Harbour Construction Company) இந்த நிர்மாணப் பணிகளை முன்னெடுத்து வருகின்றது.
இந்தக் கள விஜயத்தில் நகர அபிவிருத்தி அமைச்சின் திட்ட மேலாண்மை பிரிவின் பணிப்பாளர் நிஹால் திஸாநாயக்க, பிரதித் திட்டப் பணிப்பாளர் ஏ.கே.எம். அன்ஃபாஸ் மற்றும் ஏனைய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
நகர்ப்புற சமூகங்களுக்கு நிலையான வீட்டு வசதிகளை வழங்குவதற்கும் அவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்கும் அரசாங்கம் முன்னெடுத்து வரும் விரிவான திட்டத்தின் ஒரு பகுதியாக இது அமைந்துள்ளது.
குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்கள் மற்றும் அரசாங்க ஊழியர்களின் வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய, வரும் ஆண்டுகளில் இது போன்ற பல திட்டங்கள் ஆரம்பிக்கப்படும் என நகர அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

