
செம்மணி மனித புதைகுழி ; மூன்றாம் கட்ட அகழ்வு ஏப்ரல் 20ஆம் திகதி
செம்மணி மனித புதைகுழி தொடர்பான மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை எதிர்வரும் ஏப்ரல் 20ஆம் திகதி முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நேற்று (13) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.
விசாரணையின் போது, புதைகுழியைச் சூழவுள்ள பகுதிகளை வாரத்தில் இரண்டு நாட்கள் சட்ட வைத்திய அதிகாரியின் நேரடி கண்காணிப்பில் துப்பரவு செய்ய வேண்டும் என நல்லூர் பிரதேச சபைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், அகழ்வு பணிகளில் ஈடுபடும் பணியாளர்களுக்கும் உபகரணங்களை வைக்கவும் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கொட்டகைகள் ‘டித்வா’ புயலும் அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் பெய்த பருவமழையும் காரணமாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதனால் அவற்றை அகற்றி புதிய கொட்டகைகள் அமைப்பதற்கும், முந்தைய அகழ்வு பணிகளின் போது ஏற்பாடு செய்யப்பட்டதைப் போல தேவையான தளபாட வசதிகளை இம்முறையும் ஏற்பாடு செய்ய நல்லூர் பிரதேச சபைக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
புதைகுழி பகுதிக்கு நேரில் சென்று கள ஆய்வு மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டிருந்ததால், நீதவான் எஸ். லெனின்குமார், சட்ட வைத்திய அதிகாரி எஸ். பிரணவன், சட்டத்தரணிகள் நிரஞ்சன் மற்றும் ரணித்தா, நல்லூர் பிரதேச சபை செயலாளர் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.
அந்த நேரத்தில் புதைகுழிக்குள் தற்போது நீர் தேங்கி இருப்பது கண்டறியப்பட்டதால், எதிர்வரும் 28ஆம் திகதி சட்ட வைத்திய அதிகாரியின் கண்காணிப்பில் நீரை வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், இந்த வழக்கு எதிர்வரும் ஏப்ரல் 8ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்படுவதுடன், ஏப்ரல் 20ஆம் திகதி மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பிரதீபன்

