
கண்டியில் பட்ட பகலில் மாணிக்கக்கல் கொள்ளை
கண்டி, ஈ.எல். சேனநாயக்க வீதியில் அமைந்துள்ள மாணிக்கக்கல் விற்பனை நிலையம் ஒன்றிற்கு இன்று (13) மதியம் வந்த நபர் ஒருவர், அங்கிருந்த மாணிக்கக்கல் (Ruby) பெட்டி ஒன்றைக் கொள்ளையடித்துத் தப்பிச் சென்றுள்ளார்.
விற்பனை நிலையத்தில் இருந்த நபரின் முகத்தில் ஏதோ ஒரு திரவத்தைத் தெளித்த பின்னரே சந்தேக நபர் இந்தக் கொள்ளையைச் செய்துள்ளார்.
இந்த இடம் மாணிக்கக்கற்களை விற்பனை செய்தல், பரிசோதித்தல் மற்றும் மாணிக்கக்கற்களுக்கான சான்றிதழ் வழங்கும் பணிகளை முன்னெடுத்து வந்த ஒரு இடமாகும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளது.
மாணிக்கக்கற்களை வாங்குவதற்காக வருவது போல் கடைக்குள் நுழைந்த சந்தேக நபர், பின்னர் அங்கிருந்த ஊழியரின் முகத்தில் ஒரு திரவத்தைத் தெளித்துவிட்டு, அவர் கையில் இருந்த மாணிக்கக்கல் பெட்டியைப் பறித்துச் சென்றுள்ளார்.
இதன் மதிப்பு சுமார் 6 மில்லியன் ரூபாய் (ரூபா 60 இலட்சம்) எனத் தெரிவிக்கப்படுகிறது.
கண்டி பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

