
ஈரான் எண்ணெய் மீதான தடைகள் 30 நாட்களுக்கு அமெரிக்கா நீக்கியது
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வைக் கருத்தில் கொண்டு, ஈரான் எண்ணெய் மீது விதிக்கப்பட்டிருந்த தடைகளை 30 நாட்களுக்கு நீக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக முன்னெடுத்துள்ள போர் நடவடிக்கைகளால் உலக எரிசக்தி சந்தையில் ஏற்பட்டுள்ள பாதிப்பைக் குறைக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் தற்போது கடலில் கப்பல்களில் ஏற்றப்பட்டுள்ள சுமார் 140 மில்லியன் பேரல் ஈரானிய எண்ணெய் உலக சந்தைக்கு வரவுள்ளது.
மார்ச் 20 முதல் ஏப்ரல் 19 வரை கப்பல்களில் ஏற்றப்பட்ட ஈரானிய கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை விற்க இதன்மூலம் பொது உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்காட் பெசென்ட் விடுத்துள்ள அறிக்கையின்படி, இந்தத் தளர்வு புதிய கொள்வனவு கட்டளைகளுக்கு பொருந்தாது எனவும் ஏற்கனவே கப்பல்களில் ஏற்றப்பட்டு, கடலில் இருக்கும் எண்ணெய்க்கு மட்டுமே இது பொருந்தும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஈரானிய எண்ணெய் சந்தைக்கு வருவதன் மூலம், அடுத்த 10 முதல் 14 நாட்களுக்குள் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாகக் குறையும் என அமெரிக்கா மதிப்பிட்டுள்ளது.
ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் நீண்டகாலக் கடுமையான வெளியுறவுக் கொள்கையில் இது ஒரு வியத்தகு மாற்றமாகக் கருதப்படுகிறது.
தடைகள் இருந்த காலத்தில், சீனா ஈரானிடமிருந்து மிகக் குறைந்த தள்ளுபடி விலையில் எண்ணெயைப் பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா சமீபத்தில் ரஷ்ய எண்ணெய் மீதான சில தடைகளையும் இதேபோல் நீக்கியிருந்ததை இந்தச் செய்தி சுட்டிக்காட்டுகிறது.

