
கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருள் பறிமுதல் ; இருவர் கைது
சுமார் 10 கோடி ரூபாவிற்கும் அதிக சந்தைப் பெறுமதியுடைய “குஷ்” போதைப்பொருள் தொகையை நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற இரு இலங்கை பயணிகள், கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று (26) அதிகாலை, ‘பசுமை வழி’ ஊடாக இந்தப் போதைப்பொருளை வெளியே எடுத்துச் செல்ல முயன்றபோதே அவர்கள் பிடிபட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் கொண்டு வந்த 4 பயணப் பொதிகளில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 12 பெக்கெட்டுகளில், 10 கிலோ 476 கிராம் எடையுடைய “குஷ்” போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் போதைப்பொருளின் மொத்தப் பெறுமதி 10 கோடியே 47 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் பொகவந்தலாவைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 25 வயதுடைய ஒருவர் துணிக்கடை ஊழியராகவும், 26 வயதுடைய மற்றையவர் சாரதியாகவும் உள்ளனர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபர்களும், பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் தொகையும் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

