
இந்தியாவின் எரிபொருள் வரி மாதிரியைப் பின்பற்றுமாறு அரசாங்கத்திற்கு நாமல் ராஜபக்ஷ கோரிக்கை
இந்தியாவின் சமீபத்திய எரிபொருள் வரி திருத்தத்தைப் போன்றதொரு மாதிரியை இலங்கை அரசாங்கமும் பரிசீலிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் தனது ‘X’ சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ,
இந்தியா தனது உற்பத்தி வரியைக் குறைத்தது விலைகளை உடனடியாகக் குறைப்பதற்காக அல்ல, மாறாக உலகளாவிய எரிபொருள் விலை அதிகரிப்புகளின் போது சந்தையை ஸ்திரப்படுத்தவும், மேலதிக விலை உயர்வைத் தடுக்கவுமே என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை முன்னோக்கிச் செல்லும்போது, அரசாங்கம் தனது சொந்த பொருளாதாரக் கொள்கைகளை வலுப்படுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வரிச் சுமையைக் குறைத்தல்: “நிதி ஒழுக்கம் முக்கியமானது என்றாலும், இந்தியாவின் வளர்ச்சி சார்ந்த அணுகுமுறையைப் போல அதிகப்படியான வரிச் சுமைகளைக் குறைப்பது முதலீடுகளை ஊக்குவிக்கவும், குடிமக்கள் மீதான அழுத்தத்தைத் தணிக்கவும், நீண்டகால மீட்சிக்கு ஆதரவளிக்கவும் உதவும்” என அவர் தெரிவித்துள்ளார்.
38,000 தொன் எரிபொருளை இலங்கைக்கு சரியான நேரத்தில் வழங்கியதன் மூலம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இந்திய மக்களும் மீண்டும் ஒருமுறை ‘அயலகத்திற்கே முதலிடம்’ என்ற கொள்கையை உறுதிப்படுத்தியுள்ளனர் என அவர் பாராட்டியுள்ளார்.
“முக்கியமான விநியோகங்கள் முதல் பொருளாதார உதவி வரை, நெருக்கடி காலங்களில் இலங்கையின் முதல் மீட்பாளராக இந்தியா தொடர்ந்து நின்றுள்ளது. பிராந்தியத்தின் முன்னேற்றத்திற்காக நாடுகள் மூலோபாய பங்காளிகளாக இணைந்து செயல்படுவது அவசியமானது” என்றும் அவர் மேலும் சேர்த்துள்ளார்.

