அமெரிக்கத் தரைப்படைத் தாக்குதலுக்கு ஈரான் தயார் – நாடாளுமன்ற சபாநாயகர் எச்சரிக்கை

அமெரிக்கத் தரைப்படைத் தாக்குதலுக்கு ஈரான் தயார் – நாடாளுமன்ற சபாநாயகர் எச்சரிக்கை

ஈரான் மீதான அமெரிக்காவின் தரைவழிப் போர் நடவடிக்கையை அந்நாட்டுப் படைகள் எதிர்பார்த்துக் காத்திருப்பதாகவும், அவ்வாறு ஊடுருவ முற்படும் படைகளை “தீயிட்டு அழிப்பதுடன் அவர்களின் பிராந்திய பங்காளிகளையும் நிரந்தரமாகத் தண்டிப்போம்” என்றும் ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் மொஹமட் பாகர் காலிபாப் (Mohammad Bagher Ghalibaf) இன்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா பகிரங்கமாக பேச்சுவார்த்தைகளைப் பற்றிப் பேசிக்கொண்டு, இரகசியமாக தரைவழித் தாக்குதலுக்குத் திட்டமிடுவதாக காலிபாப் குற்றம் சாட்டியுள்ளார்.

ஈரானில் வாரக்கணக்கில் நீடிக்கக்கூடிய தரைவழிப் போர் நடவடிக்கைகளுக்கு பென்டகன் அதிகாரிகள் தயாராகி வருவதாக ‘வொஷிங்டன் போஸ்ட்’ செய்தி வெளியிட்டிருந்த பின்னணியிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

‘யுஎஸ்எஸ் திரிபோலி’ (USS Tripoli) என்ற அமெரிக்கக் கடற்படைக் கப்பலில் ஆயிரக்கணக்கான வீரர்கள் பிராந்தியத்திற்கு வந்து சேர்ந்துள்ளனர்.

இதில் சுமார் 3,500 கடற்படை வீரர்கள், போக்குவரத்து மற்றும் தாக்குதல் விமானங்கள் மற்றும் தரை-நீர் என இரு நிலைகளிலும் இயங்கக்கூடிய (Amphibious) இராணுவத் தளவாடங்கள் உள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் நிலைப்பாடு: எவ்வாறாயினும், தரைவழித் தாக்குதல் இல்லாமலேயே அமெரிக்கா தனது இலக்குகளை அடைய முடியும் என வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தார்.

இதேவேளை ஈரானின் ஆதரவு பெற்ற யேமனின் ஹௌதி கிளர்ச்சியாளர்கள் 24 மணி நேரத்திற்குள் இஸ்ரேல் மீது இரண்டாவது முறையாகத் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், வரும் நாட்களில் இராணுவ நடவடிக்கைகளைத் தொடரப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )