கடந்த கால அரசாங்கத்திற்கு விளையாட்டு காட்டியது போல எமக்கு காட்ட வேண்டும் 

கடந்த கால அரசாங்கத்திற்கு விளையாட்டு காட்டியது போல எமக்கு காட்ட வேண்டும் 

வடக்கில் செயல்படும் மணல் மாஃபியாக்களின் பின்னால் சில அரசியல்வாதிகளும், சில பொலிஸாரும் உள்ளனர் என்பது தெரிந்ததே என இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

வட மாகாணத்தில் சட்டவிரோத கனியவள அகழ்வு மற்றும் விநியோகத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக வட மாகாணம் ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற அவசர உயர்மட்டக் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு கூறினார்.

அண்மையில் மணல் கொள்ளையர்களின் செயல்பாடுகளால் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இன்று ஒரு பொலிஸ் அதிகாரியின் உயிரும் பலியாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

“இது மிகக் கடுமையான நிலைக்கு சென்றுள்ளது. இவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என அவர் எச்சரித்தார்.

மணல் விநியோகத்தை ஒழுங்குபடுத்துவதன் மூலம், ஒரு கியூப் மணலை ரூ.7,500க்கு வழங்க முடியும் என்றும், ஒரு டிப்பர் மணலை சுமார் ரூ.55,000 முதல் 65,000 வரை விற்பனை செய்ய இயலும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆனால், சட்டவிரோதமாக செயல்படும் குழுக்கள் யாழ்ப்பாணம் பகுதியில் ஒரு டிப்பர் மணலை ரூ.120,000 வரை விற்பனை செய்கின்றன என்றும் குற்றம்சாட்டினார்.

மேலும், சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான அபராதங்கள் விதிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். முதல் தடவையில் ரூ.50,000 அபராதம், இரண்டாவது தடவையில் ரூ.20 இலட்சம் வரை அபராதம், மூன்றாவது தடவையில் வாகனம் அரசுடைமையாக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

மாஃபியாக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் கடுமையாக அமல்படுத்தப்படும் என்றும், கடந்த கால ஆட்சிகளைப் போல தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தையும் எளிதில் பாதிக்க முடியும் என யாரும் நினைக்க வேண்டாம் என அவர் எச்சரித்தார்.

சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த பொதுமக்களின் பங்களிப்பு அவசியம் எனவும், தகவல்களை வழங்குவதற்காக விரைவில் சிறப்பு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )