
மருத்துவ பணியிட மாற்றங்களுக்கு எதிர்ப்பு ; நாளை நாடு தழுவிய அடையாளப் போராட்டம்
எந்தவித கலந்தாலோசனையும் இன்றி, சட்டவிரோதமாகவும் அரசியல் நோக்கங்களுடனும் மருத்துவர்களின் பணியிட மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
இன்று (30) நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் பேசிய டாக்டர் ஹன்சமால் வீரசூரிய, பணியிட மாற்றங்களுக்கான பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இதுபோன்ற நடவடிக்கை இதற்கு முன் எப்போதும் இடம்பெறவில்லை என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில், குறித்த பணியிட மாற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை காலை 08.00 மணி முதல் நாடு தழுவிய ஒருநாள் அடையாளப் போராட்டத்தை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்நடவடிக்கையை நிறுத்துவதற்கான அவசியம் ஏற்பட்டால், நாளை காலை (31) வரை அவகாசம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, எந்த சூழ்நிலையிலும் அவசர சிகிச்சை சேவைகள் வழக்கம்போல் வழங்கப்படும் என்றும் அவர் பொதுமக்களுக்கு உறுதியளித்தார்.

