
ரஷ்யா – சீனா வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தியதால் ஹோமுஸ் நீரிணை பாதுகாப்புத் தீர்மானம் தோல்வி
ஹோமுஸ் நீரிணையின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக ஒருங்கிணைந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் முன்வைக்கப்பட்ட தீர்மானம், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் தோல்வியடைந்துள்ளது.
ஐநா பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பு நாடுகளான ரஷ்யா மற்றும் சீனா தமது வீட்டோஅதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தத் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்ததால் இது தோற்கடிக்கப்பட்டது.
பஹ்ரைன் வெளியுறவு அமைச்சர் டாக்டர் அப்துல்லத்தீப் பின் ரஷித் அல் சயானி தலைமையில் நடைபெற்ற இந்தத் தீர்மானமிக்க கூட்டத்தில், 11 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன.
பாகிஸ்தான் மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் தவிர்ந்துகொண்டன
பல வாரங்களாக நடைபெற்ற ஆலோசனைகளுக்குப் பிறகு, இந்தத் தீர்மானம் பல மாற்றங்களுக்கு உள்ளானது:
முதலில் இராணுவ பலத்தைப் பயன்படுத்த அனுமதிக்கும் (ஐநா சாசனத்தின் VII வது அத்தியாயத்தின் கீழ்) மிகவும் கடுமையான நிபந்தனைகளுடன் இத்தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
பின்னர் இது படிப்படியாகத் தளர்த்தப்பட்டு, இறுதியில் “பாதுகாப்பு நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் நிலைக்கு மாற்றப்பட்டது. இருப்பினும், ரஷ்யா மற்றும் சீனாவின் எதிர்ப்பால் இது நிறைவேற்றப்படவில்லை.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், சர்வதேச எரிபொருள் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹோமுஸ் நீரிணை தொடர்பான இந்த முடிவு சர்வதேச ரீதியாக உற்றுநோக்கப்படுகிறது.

