
தெற்கு கடலில் மீன்பிடி படகில் 400 கோடி ரூபா பெறுமதியான 150kg ஹெரோயின்-20 கோடி ரூபா ஒப்பந்தம் – நால்வர் கைது -வெளியான உண்மைகள்
150 கிலோகிராமிற்கும் அதிக எடையுள்ள ஹெரோயின் போதைப்பொருளைக் கடத்திச் சென்றபோது கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பலநாள் மீன்பிடி படகு, இன்று (17) காலை திக்ஓவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அருண ஜயசேகர இது பற்றி தெரிவித்த போது ,
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 400 கோடி ரூபாவிற்கும் அதிகம் எனத் குறிப்பிட்டார்.
மேலும், இந்த போதைப்பொருள் கடத்தலை முன்னெடுப்பதற்காக, படகின் மாலுமி மற்றும் மூன்று மீனவர்களுக்கு 20 கோடி ரூபா வழங்குவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
கடத்தலுக்காக மாலுமிக்கு 20 இலட்சம் ரூபாவும், மற்றொரு மீனவருக்கு 5 இலட்சம் ரூபாவும், ஏனைய இருவருக்கு முறையே 2 இலட்சம் மற்றும் 50,000 ரூபாவும் முன்பணமாக வழங்கப்பட்டுள்ளன.
வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள ‘பொல்அத்துமோதர சரத்’ என்பவரே இந்தக் கடத்தலை ஒருங்கிணைத்துள்ளார். இவருக்குப் பின்னால் ‘குடு சலிந்து’ அல்லது ‘ரன் மல்லி’ ஆகிய பாரிய போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இருக்கலாம் என பாதுகாப்புப் பிரிவினர் சந்தேகிக்கின்றனர்.
இந்த போதைப்பொருள் சர்வதேச கடற்பரப்பில் வைத்து ஈரானியக் கப்பல் ஒன்றிலிருந்து இவர்களது படகிற்கு மாற்றப்பட்டுள்ளது.
கடற்படையினர் படகைச் சோதனையிட வந்தபோது, மீனவர்கள் தங்களது இரண்டு செய்மதி தொலைபேசிகளை கடலில் வீசியுள்ளனர். மேலும், பிடிபடும் பட்சத்தில் போதைப்பொருள் மூட்டைகளை கடலில் மூழ்கடிப்பதற்காக அவற்றில் உப்புக் கட்டிகளைத் தொங்கவிட்டிருந்த போதிலும், கடற்படையினரின் மின்னல் வேக நடவடிக்கையால் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது.
தெனுவன் புதா (Denuwan Putha) எனப் பெயரிடப்பட்ட இந்தப் படகு, கடந்த மார்ச் 31ஆம் திகதி தெற்கு கடற்பரப்பிலிருந்து புறப்பட்டுள்ளது.
இந்தப் படகைச் சோதனையிட்டபோது அதிலிருந்து 6 உறைகளில் அடைக்கப்பட்டிருந்த 150 கிலோ ஹெரோயின் கைப்பற்றப்பட்டதுடன், நான்கு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

