
பிட்டிகலயில் SLPP முன்னாள் MP சம்பத் அத்துகோரல கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டார்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காலி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பத் அத்துகோரல மீது பிட்டிகல, பம்பரவான பகுதியில் வைத்து கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பிட்டிகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பம்பரவான உஸ்பீம் ஜனபதய டிஜே வத்த’ பகுதியில் நேற்று (ஏப்ரல் 17) நள்ளிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுளளது.
குறித்த பகுதியில் குழுவொன்று கலகம் விளைவிக்கும் வகையில் நடந்துகொள்வதாக கிடைத்த தகவலையடுத்து, அது குறித்து ஆராய்வதற்காக சம்பத் அத்துகோரல அங்கு சென்றுள்ளார்.
அங்கு நின்றிருந்த நபர் ஒருவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மீது கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல் நடத்தியுள்ளார்.
காயமடைந்த அவர் காலி கராப்பிட்டிய தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்ற பின்னர் தற்போது வீடு திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிட்டிகல பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

