
“Srilankan Airlines” பெயரில் வாட்ஸ்அப் மோசடி ; பொதுமக்களுக்கு எச்சரிக்கை
“SriLankan Airlines” நிறுவனத்தின் சேவையாகக் காட்டிக்கொண்டு வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டு மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடியில் ஈடுபடும் நபர்கள், பயனாளிகளை போலியான இணையதளங்களுக்கு வழிநடத்தி “Sri Lankan.apk” என்ற மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு தூண்டுகின்றனர். குறித்த செயலி வங்கி ட்ரோஜன் வகை தீங்கிழைக்கும் மென்பொருளாக இருந்து, பண மோசடிகளுக்குப் பயன்படுத்தப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்த செயலியை நிறுவியவுடன், மோசடி நபர்களுக்கு உங்கள் கைத்தொலைபேசிக்கு தொலைநிலை அணுகல் கிடைக்கின்றது. இதன் மூலம் உங்கள் தனிப்பட்ட தரவுகள், வங்கி தகவல்கள் மற்றும் பாதுகாப்பு குறியீடுகள் எளிதில் களவாடப்பட வாய்ப்பு உள்ளது.
மேலும், One-Time Password (OTP), வங்கி கணக்கு விவரங்கள், கைவிரல் ரேகை மற்றும் முக அடையாளம் போன்ற முக்கிய தகவல்களையும் இந்த செயலி திருடி, உங்கள் பணத்தை பிற கணக்குகளுக்கு மாற்ற பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த மோசடி நடவடிக்கைகளுக்காக சில வாட்ஸ்அப் தொலைபேசி எண்களும் பயன்படுத்தப்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
எனவே, விரைவான நிதி இலாபத்தை வாக்குறுதி அளிக்கும் இத்தகைய அறியப்படாத இணைப்புகள் அல்லது செயலிகளை பதிவிறக்கம் செய்வதைத் தவிர்க்குமாறும், சந்தேகத்திற்கிடமான தகவல்களுக்கு உடனடியாக பதிலளிக்காமல் இருப்பதையும் பொதுமக்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

