போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 22 தேரர்களை 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய உத்தரவு

போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 22 தேரர்களை 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய உத்தரவு

சுமார் 110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய குஷ் மற்றும் ஹஷீஷ் போதைப்பொருட்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட 22 தேரர்களை, 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நீர்கொழும்பு மேலதிக நீதவான் சுபாணி அபேசேகர இன்று உத்தரவிட்டுள்ளார்.

அதேவேளை, இந்தக் கடத்தல் கும்பலை வழிநடத்தியதாகக் கருதப்படும் பிரதான தேரர், இன்று பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கம்பஹா, மீகஹமுல்ல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட போலி துறவிகள் தொடர்பில்
இலங்கையின் மூன்று பிரதான பௌத்த நிக்காயக்களின் மகாநாயக்க தேரர்கள் விடுத்துள்ள கூட்டு அறிக்கையில்
கூறியது என்ன ?

இளம் தேரர்களை சட்டவிரோத செயல்களில் திட்டமிட்டு ஈடுபடுத்தும் போதைப்பொருள் வலையமைப்புகளுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

பௌத்த மத போதனைகளுக்கு முரணாகவும், சட்டவிரோதமாகவும், காவிஉடையை தவறாகப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இந்த துறவி வேடமிட்ட குழுவினரை மகாநாயக்க தேரர்கள் வன்மையாகக் கண்டித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து நபர்கள் குறித்தும் விசாரணைகள் நடத்தப்படும் என்றும், குற்றவாளிகள் என நிரூபிக்கப்படுபவர்கள் பௌத்த துறவி அந்தஸ்திலிருந்து நீக்கப்படுவார்கள் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இளம் தேரர்களின் நடத்தைகள் குறித்து ஆசிரியர்களும் சிரேஷ்ட தேரர்களும் தொடர்ச்சியாகக் கண்காணிக்க வேண்டும் என்றும், ஒழுக்கக் குறைபாடுகள் காணப்படின் அவர்களை நல்வழிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

பௌத்த சமூகத்தினர் காவி உடை மீது வைத்துள்ள புனிதமான பக்தியையும், தேரர்களுக்கு சமூகத்தில் அளிக்கப்படும் கௌரவத்தையும் இந்தச் செயல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

திப்பொட்டுவாவே ஸ்ரீ சுமங்களாபிதான மகா தேரர்,
ஞானரத்ன அபிதான மகா தேரர் ,
மகுலாவே விமல மகா தேரர் ,
கரகொட உயன்கொட மைத்ரீ மூர்த்தி மகா தேரர் ஆகிய மகாநாயக்க தேரர்கள் இந்த விசேட அறிக்கையில் கையொப்பமிட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 101கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய குஷ் மற்றும் ஹஷீஷ் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட 19 முதல் 28 வயதுடைய 22 தேரர்கள் , தற்போது 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்யப்படவுள்ளனர். இவர்கள் தாய்லாந்திலிருந்து வருகை தந்த போதே பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்கள் நேற்று (25) இரவு 10:11 மணியளவில் தாய்லாந்திலிருந்து வருகை தந்துள்ளனர். அவர்கள் கொண்டு வந்த ஒரே மாதிரியான பயணப் பொதிகளில் பாடசாலை உபகரணங்கள் மற்றும் இனிப்புப் பண்டங்களுக்கு அடியில் இரகசிய அறைகள் அமைக்கப்பட்டு போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

மொத்தமாக 112 கிலோகிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவரிடமும் தலா 5 கிலோகிராம் போதைப்பொருள் இருந்துள்ளது.

ஜம்புரலிய பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று தேரர்களே இந்தத் தாய்லாந்து சுற்றுப்பயணத்தை ஒருங்கிணைத்துள்ளனர். ஏனைய 19 பேரையும் இவர்கள் பேஸ்புக் ஊடாகவே தொடர்பு கொண்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் நாட்டின் பல பகுதிகளிலும் தங்கியிருந்து உயர்கல்வி கற்று வரும் இளம் தேரர்களாவர். மற்றைய நபர் ஒரு பிரிவெனா ஆசிரியர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பிக்குகள் சாதாரண நபர்கள் போன்று தாயலாந்தில் செயற்பட்ட விதம் குறித்த புகைப்படங்கள் அவர்களது மொபைல் போன்களில் கைப்பற்றப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )