
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 22 பிக்குகளுக்கும் மே மாதம் 12 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியல்
தாய்லாந்தில் இருந்து குஷ் மற்றும் ஹஷீஷ் ஆகிய போதைப்பொருட்களை இலங்கைக்கு கடத்தி வந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 22 பிக்குகள், இன்று (02) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் மே மாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஏப்ரல் 25 ஆம் திகதி, குறித்த பிக்குகள் இலங்கைக்கு வருகை தந்தபோது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து 112 கிலோகிராம் குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் மூலம், அமிதானந்த என்ற பெயருடைய பிக்கு ஒருவரே இந்த சட்டவிரோத கடத்தல் நடவடிக்கையை மெகா அளவில் திட்டமிட்டு மெய்யப்படுத்தியமை கண்டறியப்பட்டது.
இதனையடுத்து, கம்பஹா பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் மறைந்திருந்த குறித்த பிரதான சூத்திரதாரியான அமிதானந்த தேரர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நாளை (03) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
இவரது வழிகாட்டலில் இதற்கு முன்னரும் இவ்வாறான போதைப்பொருள் கடத்தல்கள் இடம்பெற்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த கடத்தலுக்கு உதவி வழங்கிய மற்றுமொரு சந்தேகநபர் அத்துருகிரிய பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தினர், சந்தேகநபர்களை 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்த பின்னரே இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

