
ரஷ்ய நாட்டின் சுகாதார அமைச்சருக்கும் சுகாதார அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு
எங்கள் நாட்டின் சுகாதார அமைப்பை மேலும் விருத்தி செய்வதற்கு ரஷ்யாவின் முழு ஆதரவு வழங்க உள்ளது.
எங்கள் நாட்டின் மருத்துவர்களுக்கு உயர்கல்வி வழங்கவும், நவீன தொழில்நுட்பத்தின் மூலம் சுகாதார சேவையை வலுப்படுத்தவும் ரஷ்யா ஆதரவு வழங்க உள்ளது.
மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயமாக (03) இலங்கை வந்தடைந்த ரஷ்ய நாட்டின் சுகாதார அமைச்சர் திரு. மிகைல் முராஷ்கோ (Mr.Mikhail Murashko) உள்ளிட்ட குழுவினர், இன்று (04) சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ மற்றும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகத்தின் உயர் அதிகாரிகளை சந்தித்து, சுகாதார சேவையின் பல்வேறு தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து ஒரு விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
சுகாதார பிரதி அமைச்சர் டாக்டர் ஹன்சக விஜேமுனி மற்றும் இலங்கைக்கான ரஷ்ய தூதர் திரு. லெவன் ஜகரேயன் ஆகியோரும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர். இந்த சந்திப்பின் போது, இரு தரப்பினரும் ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பின் மேம்பாட்டில் கவனம் செலுத்தி கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
இந்த கலந்துரையாடலின் போது, ரஷ்ய கூட்டமைப்பின் சுகாதார அமைச்சர் திரு.மிக்கைல் முராஷ்கோ இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு ஒத்துழைப்பை நினைவு கூர்ந்தார். எதிர்காலத்தில் நாட்டின் சுகாதார அமைப்பை மேம்படுத்துவதற்கு தனது நாட்டின் ஆதரவை வழங்க விரும்புவதாகவும், இலங்கையின் சகோதரத்துவ மக்களின் நலனுக்காக சிநேகபூர்வ ஒத்துழைப்பின் மூலம் அதனை மேலும் வலுப்படுத்த விரும்புவதாகவும் அவர் கூறினார்.
நாட்டில் நிலவும் எரிசக்தி பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நட்பு ரீதியிலான ஒத்துழைப்பை வழங்க தயாராக இருப்பதாகவும் இரு நாடுகளுக்கும் இடையே மருந்து உற்பத்தி மற்றும் விநியோகத்தை வலுப்படுத்த விரும்புவதாகவும் மிகைல் முராஷ்கோ கூறினார்.
ரஷ்ய சுகாதார அமைச்சர் மேலும் கூறுகையில், இந்த நாட்டில் உள்ள மருத்துவர்களுக்கு மேலதிக மருத்துவக் கல்வி வழங்க ரஷ்யா தயாராக உள்ளது என்றும், எதிர்காலத்தில் ரஷ்ய சுகாதார அமைச்சுக்கும் இலங்கையின் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சுக்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்படுவது, பரஸ்பர ஒருங்கிணைப்பின் மூலம் ஒரு முன்னேற்றப் பாதையை அமைக்கும் என்றும் தெரிவித்தார். ரஷ்ய சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ, ரஷ்ய அமைப்பைப் புரிந்துகொள்வதற்கும், நவீன மருத்துவ உபகரணங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய நவீன சிகிச்சை சேவைகளைப் பற்றி அறிந்துகொள்வதற்கும், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ உள்ளிட்ட அதிகாரிகளை ரஷ்யாவிற்கு உத்தியோகப்பூர்வப் பயணம் மேற்கொள்ள அழைப்பதாகவும், அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
அதே சமயம் நகர்ப்புறங்களில் 42 வெவ்வேறு நோய்களை கண்டறி வதற்கு செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட ஒரு நவீன தொழில்நுட்ப உபகரண அமைப்பு குறித்தும் அமைச்சருக்கு விளக்கமளிக்கப்பட்டது
இந்நிகழ்வில் உரையாற்றிய சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ அவர்கள் கடந்த மூன்றாண்டு தனது சேவை காலத்தில் தன்னோடு இணைந்து நாட்டின் சுகாதார சேவைகளை மேம்படுத்தும் நோக்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியதற்காக தனது நன்றியைத் தெரிவித்தார். மேலும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியம் மற்றும் நவீன தொழில்நுட்ப உபகரணங்களின் தேவை ஆகியவற்றையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த கலந்துரையாடலைத் தொடர்ந்து, இரு அமைச்சர்களும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகத்தின் அதிகாரிகள் மற்றும் முக்கிய நிறுவனங்களின் பொறுப்பு அதிகாரிகளுடன் ஒரு சிறப்பு கலந்துரையாடலையும் நடத்தினர்.
இந்தக் கலந்துரையாடலில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் அனில் ஜசிங்க, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசெல குணவர்தன, மேலதிக செயலாளர் (நிர்வாகம்) I ஜி.எம். ஜனக கிட்சிரி, மேலதிக செயலாளர் (மருத்துவ சேவைகள்) குமார விக்ரமசிங்க, பணிப்பாளர் (சர்வதேச சுகாதாரம்) டாக்டர் அனில் சமரநாயக்க, பிரதி பணிப்பாளர் நாயகம் (மருத்துவ சேவைகள்) I டாக்டர் எச்.எம். அர்ஜுன திலகரத்ன, பிரதி பணிப்பாளர் நாயகம் (திட்டமிடல்) டாக்டர் எஸ். ஸ்ரீதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

