
தெனியாய பாடசாலை மாணவர்களுக்கிடையே பரவும் காய்ச்சல் குறித்து ஆராயும் தொற்றுநோயியல் விசேட மருத்துவக் குழு விஜயம்பாடசாலைகளுக்கு பூட்டு
சுகாதார அதிகாரிகளின் பரிந்துரையின் பேரில், நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தெனியாய வலயக் கல்விப் பணிப்பாளர் நிஷாகா ஹெட்டிகொடவினால் நேற்று (07) மற்றும் இன்று (08) ஆகிய இரு தினங்களுக்கு தெனியாய வலயத்திலுள்ள 4 பாடசாலைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மூடப்பட்ட பாடசாலைகள்:
தெனியாய மத்திய கல்லூரி
தெனியாய ராஜபக்ச மகா வித்தியாலயம்
தெனியாய புனித மத்தியூ இருமொழி பாடசாலை
பல்லேகம சித்தார்த்த வித்தியாலயம்
குறித்த பாடசாலைகளின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கிடையே நோய்ப் பரவல் அதிகரித்துள்ளதைக் கருத்திற் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனினும், இது ஒரு பாரிய மட்டத்திற்கு தீவிரமடையவில்லை என மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுமித் மனதுங்க குறிப்பிட்டுள்ளார்.
சுகாதாரத் துறையினரால் வழங்கப்படும் ஆலோசனைகளுக்கு அமைய, எதிர்வரும் நாட்களில் பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்த தீர்மானம் எடுக்கப்படும் என தென் மாகாண கல்விச் செயலாளர் என்.கே.ஆர். பத்திரண தெரிவித்துள்ளார்.

