
ஈரான் பாடசாலை மீது குண்டுவெடிப்பு ; டிரம்ப் விளக்கம்
கடந்த வாரம் அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலின் போது ஈரானில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளி மீது நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 160 பேர் உயிரிழந்த சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதலை அமெரிக்க இராணுவமே மேற்கொண்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “எங்களிடம் உள்ள ஆதாரங்களின் அடிப்படையில் பார்க்கும்போது, இந்த சம்பவம் ஈரானால் ஏற்பட்டிருக்கலாம். அவர்கள் பயன்படுத்தும் ஆயுதங்களும் வெடிபொருட்களும் தரம் குறைந்தவை.
அவற்றுக்கு இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் இல்லை. தவறுதலாக ஈரானின் ஏவுகணை அந்தப் பள்ளியின் மீது விழுந்திருக்கலாம். நாங்கள் ஒருபோதும் பள்ளி குழந்தைகள் மீது தாக்குதல் நடத்த மாட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக சர்வதேச சமூகத்தின் கவனம் தொடர்ந்து ஈர்க்கப்பட்டுள்ளதுடன், உண்மையான காரணத்தை கண்டறிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.

