
இலங்கைக் கடற்படைக்கு அமெரிக்கா வழங்கிய ‘டிசிசிவ்’ கப்பல் திருகோணமலைத் துறைமுகத்தை வந்தடைந்தது
அமெரிக்கக் கடலோரக் காவல்படையிடமிருந்து இலங்கைக் கடற்படைக்கு வழங்கப்பட்ட ‘டிசிசிவ்’ (DECISIVE) கப்பல், சுமார் மூன்று மாத கால நீண்ட கடல் பயணத்தின் பின்னர் திருகோணமலைத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இக்கப்பல் கடந்த பெப்ரவரி 20, 2026 அன்று தனது பயணத்தை ஆரம்பித்தது. சுமார் 14,775 கடல் மைல் தூரத்தைக் கடந்து இலங்கையை வந்தடைந்துள்ளது.
இலங்கைக் கடற்படைக் கப்பல் ஒன்று மேற்கொண்ட மிக நீண்ட ஒற்றைக் கடல் பயணம் இதுவாகும்.
இலங்கைக் கப்பல் ஒன்று முதன்முறையாக பனாமா கால்வாய் ஊடாக பயணித்த வரலாற்று நிகழ்வாகவும் இது பதிவாகியுள்ளது.
இது ‘B-வகை ரிலையன்ஸ் கிளாஸ்’ (Reliance Class) பிரிவைச் சேர்ந்த 210 அடி நீளமுள்ள கப்பலாகும்.
64 மீற்றர் நீளம் கொண்ட இக்கப்பல், 100 சிப்பாய்களைக் கொண்டு இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், நவீன ஆயுதங்கள் மற்றும் இயந்திரங்களைக் கொண்டுள்ளது.
இது 6000 கடல் மைல் தூரம் வரை தொடர்ந்து பயணிக்கும் ஆற்றல் கொண்டது.
இலங்கைக் கடற்படையின் கப்டன் கயான் விக்ரமசூரிய தலைமையில் 14 அதிகாரிகள் மற்றும் 72 மாலுமிகள் அடங்கிய 86 பேர் கொண்ட குழுவினர் இக்கப்பலை இலங்கைக்குக் கொண்டு வந்துள்ளனர்.
இக்கப்பல் சேவையில் இணைக்கப்பட்டதும் பின்வரும் பணிகளில் ஈடுபடுத்தப்படும்,
கடல் வழி போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துதல்.தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள். இந்தியப் பெருங்கடலில் உலக வர்த்தகத்திற்கு அவசியமான கடல் வழித்தடங்களைப் பாதுகாத்தல்.
இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தனது ‘X’ சமூக வலைத்தளப் பதிவில் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.
கடற்படை ஊடகப் பேச்சாளர் கமாண்டர் புத்திக சம்பத் தெரிவிக்கையில், இக்கப்பல் அடுத்த வாரம் கொழும்புக்குக் கொண்டு வரப்பட்டு, அங்கு உத்தியோகபூர்வமாக கடற்படைச் சேவையில் இணைக்கப்படும் எனத் தெரிவித்தார்.

