
சவூதி மீது ட்ரோன் தாக்குதல் : குவைத், கத்தார் கடும் கண்டனம்
சவூதி அரேபியாவை குறிவைத்து மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் ட்ரோன் தாக்குதல்களை குவைத் மற்றும் கத்தார் நாடுகள் கடுமையாக கண்டித்துள்ளன.
ஈராக் வான்வெளியில் இருந்து இந்த ட்ரோன் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக சவூதி அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், அதனைத் தொடர்ந்து இரு நாடுகளும் தனித்தனியாக அறிக்கைகள் வெளியிட்டுள்ளன.
குவைத் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த வான்வழி அத்துமீறல், வளைகுடா பிராந்தியத்தின் முக்கிய கட்டமைப்புகளை பாதுகாக்கும் நோக்கில் கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் 2817ஆம் இலக்க தீர்மானத்தை மீறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், சவூதி அரேபியாவின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு தங்களது முழுமையான ஆதரவு இருப்பதாகவும் குவைத் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கத்தார் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த சம்பவம் “ஏற்க முடியாத ஆக்கிரமிப்பு” என்றும், சவூதி அரேபியாவின் இறையாண்மையை நேரடியாக மீறும் செயல் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சவூதி நாட்டின் நிலப்பரப்பு மற்றும் மக்களை பாதுகாக்க எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கைகளுக்கும் தங்களது முழுமையான ஒற்றுமையும் ஆதரவும் இருப்பதாக இரு நாடுகளும் தெரிவித்துள்ளன.
முன்னதாக, சவூதி அரேபியா தனது வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலமாக மூன்று எதிரி ட்ரோன்கள் இடைமறித்து சுட்டு வீழ்த்தப்பட்டதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

