
வீதி அபிவிருத்தி அதிகாரசபை பொறியியலாளர் சங்கம் சம்பளக் கோரிக்கையை முன்வைத்து பணிபுறக்கணிப்பு
சம்பள முரண்பாடு உள்ளிட்ட இரண்டு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து இன்று (21) முதல் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
தங்களது கோரிக்கைகள் தொடர்பாக இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்ட போதிலும், இதன்போது வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படாமை காரணமாகவே இந்த தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த தொழிற்சங்க நடவடிக்கை குறித்து வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் உமேஷ் அலுதாபல கருத்துத் தெரிவிக்கையில்,
“RDA பொறியியலாளர்கள், அதிகாரசபைக்கு வெளியே உள்ள மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கள் மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கள் உள்ளிட்ட பல குழு கூட்டங்களில் கலந்துகொள்கின்றனர்.
இவ்வாறான கூட்டங்களில் இருந்து விலகியிருக்கவும், அத்துடன் வீதி அபிவிருத்தி அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் வராத, ஆனால் தேசியத் தேவையாகக் கருதி மேற்கொள்ளப்படும் ஏனைய வெளிநடவடிக்கைகளில் இருந்து விலகியிருக்கவும் தீர்மானித்துள்ளோம்.
இதன் காரணமாக திட்ட ஒருங்கிணைப்புப் பணிகளில் நாம் பங்கெடுக்காமல் போவதால் பல சிக்கல்கள் ஏற்படும்.
எமது கோரிக்கைகளுக்கு முறையான தீர்வு கிடைக்காவிடின், இந்த தொழிற்சங்க நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்த நடவடிக்கை எடுப்போம்” எனத் தெரிவித்தார்.

