பொரளையில் சட்டவிரோதமாக சம்பாதித்த பல கோடி பெறுமதியான சொத்துக்களுடன் தம்பதி கைது

பொரளையில் சட்டவிரோதமாக சம்பாதித்த பல கோடி பெறுமதியான சொத்துக்களுடன் தம்பதி கைது

உடனடி பணப்பரிமாற்ற முறைகளைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த தம்பதியினரின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவினர், பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் மேற்கொண்ட நீண்டகால விசாரணைகளின் பின்னரே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொரளை, பேஸ்லைன் வீதி, சிறிசர உயன முகவரியில் வசிக்கும் இந்த தம்பதியினர் 2017ஆம் ஆண்டு முதல் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

அத்துடன், சந்தேகநபர்கள் இதன் மூலம் கிடைத்த பணத்தை சந்தேக நபரான பெண்ணின் தாயாரின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிட்டுள்ளதாகவும் பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

மேலும், சந்தேக நபரான பெண் சட்டவிரோதமான முறையில் சம்பாதித்த பணத்தைப் பயன்படுத்தி, அத்துருகிரிய, ஒருவல சாந்த லோகாகம, கொரதொட்ட, 8வது குறுக்குத் தெருவில் அமைந்துள்ள 06 பேர்ச் காணியையும், அதில் கட்டப்பட்டுள்ள வீட்டையும் கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சுமார் 3 கோடி ரூபாவிற்கு கொள்வனவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கமைய, சந்தேகநபர்களால் கொள்வனவு செய்யப்பட்ட இந்த வீடு மற்றும் காணிக்கு பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் பிரகாரம் நேற்று (20) முதல் 07 நாட்களுக்கு முடக்கக் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நேற்று அத்துருகிரிய, ஒருகொட பகுதியில் வைத்து இந்த சந்தேகநபரான தம்பதியினர் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்ணிற்கு 32 வயது எனவும் ஆடவருக்கு 37 வயதும் எனவும் இவர்கள் பொரளை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் சந்தேக நபரான பெண், ஆடவர் மற்றும் பெண்ணின் தாயார் ஆகியோரின் பெயரிலுள்ள 06 வங்கிக் கணக்குகள் தொடர்பாகவும், சந்தேக நபரான ஆடவரின் பெயரில் கொள்வனவு செய்யப்பட்டுள்ள சொகுசு கார் தொடர்பாகவும் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )