சுகாதார பணி உதவியாளர் பதவிக்கான நேர்முகத் தேர்வுகள் ஆரம்பம் –                                      1,989 வெற்றிடங்களுக்கு 92,000 விண்ணப்பங்கள்

சுகாதார பணி உதவியாளர் பதவிக்கான நேர்முகத் தேர்வுகள் ஆரம்பம் – 1,989 வெற்றிடங்களுக்கு 92,000 விண்ணப்பங்கள்

சுகாதார மற்றும் ஊடக அமைச்சு மூலம் அரச வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களில் உள்ள ‘சுகாதார பணி உதவியாளர்’ III ஆம் தரத்தின் 1,989 வெற்றிடங்களுக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.

அதற்குரிய முதற்கட்ட கட்டமைப்பு ரீதியான நேர்முகத் தேர்வுகள் இன்று (21) காசல் வீதியில் உள்ள சுகாதார மற்றும் ஊடக அமைச்சு வளாகத்தில் ஆரம்பமாகின.

கொழும்பு, கம்பஹா, கண்டி, நுவரெலியா, காலி, யாழ்ப்பாணம், அம்பாறை, திருகோணமலை மற்றும் அனுராதபுரம் ஆகிய தற்போது வெற்றிடங்கள் நிலவும் மாவட்டங்களுக்காகவே இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

குறித்த பதவிக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி வரை 92,000 இற்கும் அதிகமான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.

சுகாதார மற்றும் ஊடக அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதற்கமைய, மேல் மாகாணத்தில் இருந்து நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ள 2,800 விண்ணப்பதாரர்களை இன்றும் (21) நாளையும் (22) இந்த நேர்முகத் தேர்வுகளுக்காக அழைப்பதற்கு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும், இப்பதவிக்கான ஆட்சேர்ப்புக்கு இணங்க எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (24) தென் மாகாணத்தின் காலி மாவட்டத்திலும், மத்திய மாகாணத்தின் நுவரெலியா மாவட்டத்திலும் நேர்முகத் தேர்வுகளை நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

நெடுங்காலத்திற்குப் பின்னர் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன், அனைத்து மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நேர்முகத் தேர்வுகளை நடத்தி, சுகாதார பணி உதவியாளர் (கனிஷ்ட) III ஆம் தரத்திற்கான ஆட்சேர்ப்புகளை முறைமையாகவும் விரைவாகவும் மேற்கொள்வதற்கு சுகாதார மற்றும் ஊடக அமைச்சு திட்டமிட்டுள்ளது.

க.பொ.த (சாதாரண தர) பரீட்சையில் இரண்டு தடவைகளுக்கு மேற்படாத அமர்வுகளில் 02 திறமைச் சித்திகள் உட்பட 06 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் அல்லது இப்பதவிக்குரிய துறையில் NVQ 3 மட்டத்திலான தொழிற்துறை தகைமையைப் பெற்றிருத்தல், 18 வயதிற்கு குறையாதவராகவும் 45 வயதிற்கு மேற்படாதவராகவும் இருத்தல் மற்றும் இலங்கையின் எந்தவொரு பகுதியிலும் பணியாற்றுவதற்கும் கடமைகளை ஆற்றுவதற்கும் போதுமான உடல், மன ஆரோக்கியம் கொண்ட இலங்கை பிரஜையாக இருத்தல் ஆகியன இந்த நேர்முகத் தேர்வுக்கான அடிப்படைத் தகைமைகள் என சுகாதார அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

சுகாதாரத் துறையில் தரமான மற்றும் திறமையான சேவையைப் பேணுவதற்கு சுகாதார பணி உதவியாளர் பதவி ஒரு அத்தியாவசிய காரணியாகும்.

இந்த ஆட்சேர்ப்புகள் மூலம் வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களில் நிலவும் ஊழியர் பற்றாக்குறைக்கு விரைவான தீர்வு கிடைப்பதுடன், தற்போதுள்ள ஊழியர்களின் பணிச்சுமையும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )