அரச ஊழியர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் முன்வைத்தார்

அரச ஊழியர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் முன்வைத்தார்

அரச சேவையில், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் அரசியல் பழிவாங்கலுக்கு ஆளான உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (04) பாராளுமன்றத்தில் முன்வைத்தார்.

🟩 முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.

முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் தரம் 3 இல் இருந்து தரம் 2 வரையும், தரம் 2 இல் இருந்து தரம் 1 வரையிலான செயல்திறனின் அடிப்படையில் 5 ஆண்டுகளில் பதவி உயர்வுக்கான தற்போதைய முறையை மாற்றி, ஒவ்வொரு தரத்திலும் 10 ஆண்டுகள் சேவைக்காலம் முடித்ததன் அடிப்படையில் பதவி உயர்வு நடைமுறை மாற்றப்பட்டுள்ளது. எனவே இந்த அசாதாரண முறை மாற்றப்பட்டு, முன்னைய முறையிலேயே பரீட்சை நடத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.

முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களை சேவையில் இணைத்துக் கொள்வதற்கு அடிப்படைத் தகைமையாக சாதாரண தரத்தில் 6 பாடங்களில் சித்தியடைந்தும், உயர்தரத்திலும் சித்தியடைந்திருக்க வேண்டும். அவர்களில் பெரும்பாலோர் பட்டதாரிகள் ஆவார். எனவே அவர்களுக்கு MN 3 சம்பளம் வழங்கப்பட வேண்டும். ஒருங்கிணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் பரிந்துரையின்படி இதனைச் செய்யலாம். இந்த சேவைக்கு 70% ஆட்சேர்ப்பு திறந்த போட்டிப் பரீட்சை அடிப்படையிலும், 30% ஆட்சேர்ப்பு வரையறுக்கப்பட்ட போட்டி பரீட்சை மூலமும் நடைபெறுகின்றன. வரையறுக்கப்பட்ட போட்டிப் பரீட்சை அடிப்படையில் மட்டுமே தற்போது இணைத்து கொள்ளப்பட்டுள்ளனர். 2020 ஆம் ஆண்டு இந்தப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்ட போதிலும், இதுவரை பரீட்சை நடத்தப்படாத நிலையில், பரீட்சையை உடனடியாக நடத்துமாறும் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.

🟩 கிராம உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளுக்கு பதிலை பெற்றுக் கொடுங்கள்!

கிராம உத்தியோகத்தர்கள் துறையில் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. உத்தியோகபூர்வ ஆடை கொடுப்பனவு 15000, பயண கொடுப்பனவு அதிகரிப்பு, மாதாந்த தொடர்பாடல் கொடுப்பனவு 1500 போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. உத்தியோகபூர்வ ஆடை கொடுப்பனவு மட்டுமே தற்போது நடைமுறையில் உள்ளதால், வழங்கப்படும் சேவைக்கு ஏற்ப இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.

கிராம உத்தியோகத்தர்கள் எதிர்பார்த்த சேவை பிரமாணக் குறிப்பு நடைமுறைப்படுத்துவதற்கு முன்னைய அரசாங்கமும் முயற்சித்த போதிலும், கிராம அலுவலர்கள் விடுத்த கோரிக்கையாக அது கொண்டு வரப்படவில்லை. எனவே, அவர்கள் கோரி நிற்கும் சேவை பிரமாணக் குறிப்பை கொண்டு வாருங்கள். வெளிப்படையான வேலைத்திட்டமொன்றுக்குச் சென்று, அவர்கள் கோரும் சேவை பிரமாணக் குறிப்பை முன்னெடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் வேண்டுகோள் விடுத்தார்.

🟩 அரசியல் பழிவாங்கல்கள் வேண்டாமே…

இந்த அரசாங்கத்தின் கீழ் அரச சேவையிலும் பழிவாங்கல் இடம்பெற்று வருகின்றன. சப்ரகமுவ மாகாண சபையின் பிரதம செயலாளர் மஹிந்த வீரசூரிய குழாத்துக்கு அழைக்கப்பட்டதையடுத்து அவர் ஓய்வுபெற்றுள்ளார். வடமேல் மாகாண பிரதம செயலாளர் தீபிகா குணரத்ன, ஊவா பரணகம பிரதேச செயலாளர், மாவட்ட செயலாளர்களான நந்தன கலபொட, இரத்தினபுரி மாவட்ட செயலாளர் வசந்த குணரத்ன, மாத்தறை மாவட்ட செயலாளர் கணேஷ் அமரசிங்க உள்ளிட்டோர் நீக்கப்பட்டுள்ளனர். பெருமளவான அரச ஊழியர்கள் இந்த அரசாங்கத்திற்கு வாக்களித்தது பழிவாங்கும் நோக்கத்துக்கு அல்ல. சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளை குற்றச்சாட்டுகள் இல்லாமல் தூக்கி விட்டு தமது நண்பர்களை நியமித்துள்ளனர். தாம் முன்வைத்துள்ள விடயங்கள் உண்மையானவையாகும். எனவே அரசாங்கம் இதற்கு விளக்கமளிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

🟩 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பைப் பெற்றுக் கொடுங்கள்.

திசைகாட்டியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் 72 ஆவது பக்கத்தில் 35000 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவோம் என குறிப்பிடப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்ட உரையில் அவ்வாறு எதுவும் குறிப்பிடவில்லை. கிட்டத்தட்ட 40000 பட்டதாரிகள் காணப்படுகின்றனர். சகல மாகாணத்திலும் வேலையற்ற பட்டதாரிகள் உள்ளனர். இவர்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அரசாங்கம் வாக்குறுதியளித்த விடயங்களை நிறைவேற்றினால், பட்டதாரிகள் இன்று போராட்டம் நடத்த மாட்டார்கள். தேர்தல் விஞ்ஞாபனத்தில் இருந்தவை வரவு செலவுத் திட்டத்தில் இருக்குமானால், இவையெல்லாம் ஏற்பட்டிருக்காது. அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை வலுவற்று வருகிறது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

🟩 தேர்தலை பிற்போட சதி செய்தது யார் என்பதை வெளிப்படுத்துங்கள்.

தேர்தலை பிற்போடும் கலாச்சாரத்திற்கு பதிலாக, தேர்தலை நடத்தும் கலாச்சாரத்திற்கு இந்த அரசாங்கம் புத்துயிர் கொடுத்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தப்பட வேண்டும் என்று நீதிமன்றத்திற்குச் சென்று உத்தரவொன்றை பெற்றது. எமது நாட்டு மக்களின் மனித உரிமைகளை மீறி, பல வருடங்களாக அரச அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து, பொய் சொல்லி, ஏமாற்றி தேர்தலை பிற்போட நடவடிக்கை எடுத்த தரப்பினருக்கு எதிராக அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கை யாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு கேள்வி எழுப்பினார்.

அரச அதிகாரிகள் சிலருக்கு விடுக்கப்பட்ட அழுத்தத்தினால் சில அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். தேர்தலை பிற்போட பிரதான சூத்திரதாரியாக செயல்பட்டவர்கள் யார் என்பது தெரிய வேண்டும். அவர்களின் பெயர்களை முகவரியோடு இந்த சபையில் முன்வைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் வேண்டுகோள் விடுத்தார்.

நியாயமான தேர்தலொன்று அவசியம். அரச அதிகாரங்களை பயன்படுத்திக் கொண்டு, தேர்தலை ஒத்திவைப்பது நெறிமுறைக்கு புறம்பானது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)