
கடந்த காலங்களில் உள்ளுராட்சிசபைகள் கொள்ளையர்களின் கூடாரங்களாக இருந்தன
” போர் வெற்றி மற்றும் மின்சாரக் கதிரை என்பவற்றைக்கூறி வாக்குவேட்டை நடத்திய காலம் மலையேறிவிட்டது. உள்ளுராட்சிசபைத் தேர்தலிலும் வடக்கு, கிழக்கு உட்பட அனைத்து சபைகளிலும் தேசிய மக்கள் சக்தி வெற்றிபெறும்.” என ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று முன்தினம் (21) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் அவர், ”நாட்டிலுள்ள அனைத்து உள்ளுராட்சிசபைகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளோம். கடந்த பொதுத்தேர்தலில் அனைத்து இடங்களிலும் வென்றோம். எனவே, உள்ளுராட்சிசபைத் தேர்தலிலும் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
பொதுத்தேர்தலின் போது கிடைக்கப்பெற்ற மக்கள் ஆணை அதிகரிக்குமேதவிர குறைவதற்கு வாய்ப்பு இல்லை. பொதுத்தேர்தலின் போது தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்காத நபர்கள்கூட இத்தேர்தலில் வாக்களிப்பார்கள்.
கடந்த காலங்களில் உள்ளுராட்சிசபைகள் கொள்ளையர்களின் கூடாரங்களாக இருந்தன. மோசடிகள் இடம்பெற்றன. மக்கள் பிரதிநிதிகள் எனக் கூறிக்கொண்டவர்கள் ஒப்பந்தக்காரர்களாகவே செயல்பட்டனர்.
இந்நிலைமை எமது ஆட்சியின் கீழ் மாற்றியமைக்கப்படும்.
முன்பு ஜே.வி.பி. வசம் இருந்த திஸ்ஸமஹாராம பிரதேச சபையைக்கூட சூழ்ச்சி செய்தே ராஜபக்ச ஆட்சிகாலத்தில் கைப்பற்றினர். போர் வெற்றி, மின்சார கதிரை இதற்காக பயன்படுத்தப்பட்டது. அந்த காலம் முடிந்துவிட்டது.” என தெரிவித்துள்ளார்.