
இரண்டாவது நாளாக தொடரும் வேலைநிறுத்தம் !
ஐந்து துணை வைத்திய தொழில்களைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் ஆரம்பித்த வேலைநிறுத்தம் இன்று (06) இரண்டாவது நாளாகவும் தொடரும் என்று துணை வைத்திய தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பின் செயலாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்தார்.
இந்த 24 மணி நேர வேலைநிறுத்தத்தை நேற்று (05) காலை 8 மணிக்கு ஆரம்பித்து இன்று காலை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டது.
இருப்பினும், நேற்று கூடிய துணை வைத்திய தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பின் நிர்வாகக் குழு, வேலைநிறுத்தத்தை 48 மணி நேரம் வரை தொடர முடிவு செய்தது.
பதவி உயர்வுகள், வார இறுதி மற்றும் விடுமுறை கொடுப்பனவுகள், பட்டதாரி ஆட்சேர்ப்பு, சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான ஒப்பந்தங்களை புறக்கணித்தல், ஓய்வூதிய நிபந்தனைகள் மற்றும் பயிற்சிகள் போன்ற பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு தீர்வினை பெற்றுத்தருமாறு கோரி இந்த வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படுகிறது

