
சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் வெலிகந்த, நெலும்வெவ வெந்நீர் ஊற்றுகளை சூழவுள்ள பகுதியை அபிவிருத்தி செய்யத் திட்டம்
Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் கீழ் பொலன்னறுவை, வெலிகந்த நெலும்வெவ பிரதேசத்தில் உள்ள வெந்நீர் ஊற்றுகளை சூழவுள்ள பிரதேசத்தை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டமொன்றை ஆரம்பிப்பதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (24) அந்தப் பகுதியில் இடம்பெற்றதுடன், அங்கு கண்காணிப்பு விஜயமும் மேற்கொள்ளப்பட்டது.
இதுவரை, இந்த வெந்நீர் ஊற்றுகளை சுற்றியுள்ள பகுதிகள் முறையாக அபிவிருத்தி செய்யப்படாத காரணத்தால், அங்கு செல்வதற்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் ஆர்வம் குறைந்துள்ளது.
இந்தக் கலந்துரையாடலில், நெலும்வெவ வெந்நீர் ஊற்றுகளை அபிவிருத்தி செய்வதன் முக்கியத்துவம், அதன் சுற்றுலா மற்றும் தொழில்நுட்ப திறன் போன்று, அதன் தற்போதைய நிலைமை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
வெந்நீர் ஊற்றுகளைச் சுற்றியுள்ள பகுதியில் வனப்பகுதியை அதிகரித்தல், தீவை அழகுபடுத்துதல், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையை இலகுபடுத்தும் வகையில் நிலப்பகுதியிலிருந்து தீவு வரை பாலம் அமைத்தல் போன்ற விடயங்களும் இங்கு கலந்துரையாடப்பட்டன.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு

